- நமது நிருபர் -நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், அந்தந்த வார்டு கவுன்சிலர் தலைமையில் வார்டு சபை கூட்டம் நடத்தி, முக்கியமான 3 கோரிக்கைகளை பரிந்துரைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. கோவையின் 100 வார்டுகளில், 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களில் சபை கூடியது. சமுதாய கூடம், பூங்கா வளாகம், மாநகராட்சி பள்ளி வளாகம் என பொது இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. முடிந்தால் ஒரு மணி நேரத்துக்குள், மிஞ்சி போனால் 2 மணி நேரத்துக்குள் கூட்டத்தை முடிக்க வாய்மொழி அறிவுரை வழங்கப்பட்டது. அதை தாண்டினால் குரல்கள் உயரும், சண்டை வரும், கைகலப்பு கூட வரக்கூடும் என்பதால் ஒரு முன்ஜாக்கிரதை, வேறொன்றும் இல்லை. கிராமப்புற ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம் நடக்கும். அதற்கு 'கோரம்' இருக்க வேண்டும் என்கிறது விதி. அதாவது, குறைந்தபட்சம் இத்தனை பேராவது வந்திருந்தால் மட்டுமே கூட்டம் செல்லும். அப்படி வராவிட்டால், கூட்டம் ரத்து என அறிவிக்கப்படும். வேறு ஒரு நாள் நடத்தப்படும். வார்டு சபைக்கு அப்படி 'கோரம்' விதி கிடையாது. சரி, இப்படி ஒரு கூட்டம் நடக்கிறது; வார்டு மக்களே, வாருங்கள் என்று ஒரு அழைப்போ அறிவிப்போ வேண்டாமா? வார்டு சபை கூட்டம் நடத்த தேதிகள் அறிவித்தார் முதல்வர், என்று பேப்பரில் வந்த செய்திதான் பலருக்கு தெரிந்திருக்கிறது. ஆகவே, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே மக்கள் வந்திருந்தனர். காலையில் வழக்கம் போல 'வாக்கிங்' போக வந்தவர்களை, வாங்க, அட வாங்க, வாங்களேன் என்று, பேட்ஜ் குத்திய பெண் ஊழியர்கள் கெஞ்சியதை பார்க்குகளில் பார்க்க முடிந்தது. ஆம்னி பஸ்ஸில் ஏற்றி விடுவார்களோ என்ற பீதியில் சட்டென வாங்கிங்கை ரன்னிங்காக மாற்றி வெளியேறினர் சிலர். ஒவ்வொரு இடத்திலும் 50 பிளாஸ்டிக் சேர்கள் வந்திறங்கி இருந்தன. அத்தனை பேர் வர மாட்டார்கள் என்று தெரியும் என்பதால், வரிசைக்கு 3 வீதம் 10 வரிசை மட்டும் சேர் போட்டிருந்தனர். அதிலும் பாதி நிரம்ப மூச்சு வாங்கியதால், மாநகராட்சி ஊழியர்களையே அமர வைத்தனர். அவர்கள் எண்ணிக்கை டஜனுக்கு குறையாது. வார்டு குடிமகனோ, குடிமகளோ வந்தால் சீட்டை காலி செய்ய தயாராக நுனியிலேயே உட்கார்ந்தார்கள். விருந்தினர்களில் குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் பிரதானமாக தெரிந்தனர். கையில் கத்தை கத்தையாக காகிதங்களும், சிலர் பெரிய ஃபைலும் வைத்திருந்தனர். அநேகமாக அனைவருமே 10 வருடத்துக்கு குறையாமல் பென்சன் வாங்கிக் கொண்டிருப்பவர்களாக தோன்றியது. காகிதங்கள் எல்லாம், அதிகாரிகளுக்கு ஏற்கனவே சமர்ப்பித்த மனுக்களின் ஜெராக்ஸ் காப்பிகள். இருந்தது ஒரே ஒரு ப்ளூடூத் மைக். கலர் கலராக லைட் எரியும் பெரிய செகண்ட்கேண்ட் ஆடியோ சிஸ்டம் ஒரு சேர் மீது பெருமையாக அமர்ந்திருந்தது. ஆனால், மைக்கில் பேசுபவரின் ஒரிஜினல் குரலை காட்டிலும் அந்த ஸ்பீக்கரில் இருந்து வெளிப்பட்ட குரல் ஏன் அத்தனை சன்னமாக ஒலித்தது என்பது விஞ்ஞான விடுகதை. கையில் மைக் கிடைத்தால் பேசுவதை நிறுத்த மாட்டார் என்பது அரசியல்வாதிக்கு மட்டுமான குணாதிசயம் அல்ல என்பதை அங்கே பார்க்க முடிந்தது. மடக்கு மேஜைக்கு மறுபக்கம் 4 சேர்களில் அமர்ந்திருந்த அதிகாரிகள், மைக் பிடித்தவர் அடுக்கிய ஒவ்வொரு புகாருக்கும் உடனடியாக பதில் சொல்லி முடிக்க முயன்றதில் கடமை உணர்வு பிரதிபலித்தது. இன்னென்ன புகார்கள் தான் வரும் என்று முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்ததைப்போலவே அதிகாரிகளின் பதில் பட்பட் என்று பறந்து வந்தது. எப்டீங்கஎன்று ஆச்சரியம் தாங்காமல் ஒரு அதிகாரியிடம் பிற்பாடு கேட்டேன். பேசியவர் கையில் வைத்திருந்த ஜெராக்ஸ் காப்பிகளின் ஒரிஜினல் எங்களிடம் தானே இருக்கிறது, என கூலாக சொன்னார் அவர். சபை கூட்டம் பற்றி ஏன் அறிவிப்பு கொடுக்கவில்லை? கொடுத்திருந்தால் நிறைய பேர் வந்திருப்பார்களே? என்பது ஆரம்ப புகார். அதிகாரியின் பதில்: அதெல்லாம் கிடையாது; வார்டு பூராவும் ஆள் அனுப்பி மைக்கில் ஒலிப்பதிவு செய்ததை ஸ்பீக்கர் வழியாக ஒலிபரப்பினோம். மக்களுக்கு ஆர்வம் இல்லாவிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்? அவர் சொன்னது என்னவோ நிஜம் தான். மாநகராட்சி ஊழியர் ஒருத்தர் ஸ்கூட்டரில் வார்டு பூராவும் சுற்றியதை முந்தைய நாள் நானே கவனித்தேன். என்ன பிரச்னை என்றால், அதில் 3 விஷயங்கள் உண்டு. 1. எந்த இடத்திலும் ஸ்கூட்டரை நிறுத்தவே இல்லை. 2. ஸ்பீக்கர் அவருடைய இரண்டு கால்களுக்கு நடுவில் வைக்கப்பட்டு இருந்ததால், அவரை தாண்டி ஒலி வெளியே வர முடியாது. 3. கூர்மையான கேட்கும் சக்தி கொண்டவர்களுக்கு வார்டு-மக்க-ளுக்கு-முக்கி-யசெய்-திஎன்ன-வென்றா-ல்நாளை-வார்டு-சபைகூ-ட்டம் என்று மும்மூன்று எழுத்துதான் ஸ்கூட்டர் தாண்டும்போது கேட்டிருக்கும். ஒரு அட்டை பெட்டியில் சூடான கீரை வடை நிரப்பிக் கொண்டு வந்தார் ஒரு ஊழியர். கேன் நிறைய டீயும் வந்தது. டிரம்ப் ரேஞ்சுக்கு மிரட்டியும் சிலர் மட்டுமே வடை கடித்து டீ குடித்தனர். அய்யோ வீணாகிறதே என்ற ஆதங்கம் பெண் ஊழியர்கள் முகத்தில் தெரிந்தது. வந்திருந்த கொஞ்சம் பேரையும் ஊழியர்கள் சுற்றி சுற்றி வந்து மொபைல் போனில் வீடியோ எடுத்த வண்ணம் இருந்தனர். மைக்கை கையில் வாங்கிய சிலருக்கு லேசான பதட்டம். ஒரு கை பார்த்து விடுவோம் என்று வீட்டில் இருந்து புறப்பட்டவர்கள். இப்போது சுதி கொஞ்சம் இறங்கியது. எதற்கும் இருக்கட்டும் என்று, பேச்சை தொடங்கும்போதே முதல்வருக்கும்,துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அத்தனை கூட்டங்களிலும் பிரதானமாக வெளிப்பட்ட 3 புகார்கள்: நடக்கவோ வாகனத்தில் செல்லவோ முடியாத அளவுக்கு ரோடுகள் மிக மோசமாக இருக்கின்றன. 2. குப்பைகள் சேகரிப்போ, துாய்மை பணியோ கொஞ்சம்கூட திருப்திகரமாக இல்லை 3. தெருவிளக்கு எரியவில்லை. குப்பை எடுப்பதில் ஒவ்வொருவரும் வித்தியாசமான புகார்களை தெரிவித்தார்கள். இந்த தெரு வேறு வார்டை சேர்ந்தது; நாங்கள் சுத்தம் செய்ய முடியாது என ஊழியர்கள் மறுப்பு சொன்னது அவற்றில் ஒன்று. நான்கு அதிகாரிகளில் ஒருவர் சேனிட்டரி சூப்பர்வைசர் என்பதால், அங்கிருந்தே யார் யாருக்கோ போன் போட்டு பேசிவிட்டு சொன்னார்: ஆமா, அந்த தெரு இந்த வார்டில் தான் வருமாம். சின்ன மிஸ் அண்டஸ்டேண்டிங். நாளைல இருந்து உங்க தெரு குப்பையும் அள்ளப்படும். எந்த தெரு எந்த வார்டில் வரும் என்பதிலேயே இன்னும் அதிகாரிகளுக்கு தெளிவு இல்லை என்பது கெட்டவர்களுக்கு 'ஜெர்க்' கொடுத்தது. பின்கோடு மாற்றியதால் பெரும் குழப்பம் என்ற தலைப்பில் பேச உரையுடன் வந்தவர், சந்தர்ப்பம் சரியில்லை என்பதால் முடிவை கைவிட்டார். ஒரு உண்மை 'பளிச்'சென புரிந்தது. மக்கள் என்ன கேட்பார்கள் என்பது அதிகாரிகளுக்கும், அதிகாரிகள் என்ன பதில் சொல்வார்கள் என்பது மக்களுக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது. கூட்டம் முடிந்து கிளம்பும்போது இரு தரப்புக்கும் திருப்தி அளிக்கும் விஷயம் அதுவாக மட்டுமே இருக்கும். மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், இந்த கூட்டத்தால் ஏதாவது பலன் உண்டா? என்ற கேள்வியை அங்கு வந்திருந்த இளம் அதிகாரியிடம் கேட்டேன். அரசாங்கம் சொல்வதை செய்ய வேண்டியது எங்கள் கடமை; அதை பூர்த்தி செய்தோம் என்றார் அவர். கூட்டம் நடந்தது முக்கால் மணி நேரம் என்றாலும், முன்னேற்பாடு எல்லாம் சேர்த்தால் மூன்று மணி நேரம் பிடிக்கும். இந்த நேரத்தில் ஆபீசில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? என்று அடுத்த கேள்வியை தள்ளிவிட்டேன். இங்கே கிளப்பப்பட்ட பிரச்னைகளில் ஒரு சிலவற்றுக்கு தீர்வு காண ஏற்பாடு செய்திருப்பேன் என்று சொல்லிவிட்டு நடையை கட்டினார்.  
'பொது நிதியில் செய்வோம்'
 மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்ட போது, ''வார்டு சிறப்பு கூட்டம் தொடர்பாக முன்னரே அறிவிப்பு வெளியிட்டு விட்டோம். மக்களை வரவழைப்பது, அந்தந்த கூட்ட அலுவலரின் பொறுப்பு. அரசு உத்தரவுப்படி, தலா மூன்று கோரிக்கைகள் வீதம் 300 பணிகள் தேர்ந்தெடுத்து, பதிவேற்றம் செய்திருக்கிறோம். நிதி ஒதுக்குவார்களா என தெரியவில்லை. மாநகராட்சி பொது நிதியிலாவது அந்த பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.