அரசு மருத்துவமனையில் டெங்கு சிகிச்சைக்கு வார்டு; கவலை வேண்டாம் என்கிறார் டீன்
கோவை; டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க, கோவை அரசு மருத்துவமனையில் 15 படுக்கைகள் அடங்கிய பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் சமயங்களில் தண்ணீர் தேங்கும்போது, நோய் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். டெங்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஜன. 1 முதல் அக். இறுதி வரை கோவை மாவட்டத்தில், 1,278 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், களப்பணியாளர்கள் தீவிர கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களும், சுற்றுப்புறங்களை சுகாதாரமாக பராமரிக்க தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கோவை அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலி கூறியதாவது: கோவையில் ஜன., முதல் இருந்த புள்ளிவிபரங்களை ஒப்பிட்டு அதிக பாதிப்பு என கூறப்படுகிறது. கோவைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து, பலர் சிகிச்சைக்கு வருகின்றனர். தற்போது, டெங்கு பாதிப்பு அதிகம் இல்லை. காய்ச்சல் பாதிப்புக்கே நான்கு பேர்தான் 'அட்மிட்' ஆகின்றனர். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 15 படுக்கை ஆக்சிஜன் வசதிகளுடன் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக அக். முதல் டிச. வரை மழை காரணமாக காய்ச்சல் பாதிப்பு இருக்கும். பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். பதற்றம் அடைய வேண்டியதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.