வாசகர்கள் கருத்துகள் ( 1 )
படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள ஸவர்மா பல நாட்களாக சூட்டிலே வெளியே இருக்கும். இதில் சால்மனெல்லா போன்ற கிருமிகள் உருவாக வாய்ப்பு அதிகம். இதை சாப்பிடாமல் இருப்பதே நலம்.
கோவை; ஓட்டல்களில் எக்காரணம் கொண்டும், சமைத்த உணவை பிரிட்ஜில் வைத்து மறுநாள் கொடுக்கக்கூடாது. இதில் உருவாகும் பாக்டீரியா, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை, இறப்பு வரை கொண்டு செல்லும் என்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி அனுராதா எச்சரித்தார்.கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், துரித உணவக உரிமையாளர்களுக்கு அரசால் தடைசெய்யப்பட்ட மயோனைஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு, நேற்று ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ரிதம் அரங்கில் நடந்தது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி அனுராதா தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: பச்சை முட்டையில் தயார் செய்யப்படும் மயோனைஸ் சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால், இறப்பு வரை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், கட்டாயம் அதை தவிர்க்க வேண்டும். பொறுப்பு வேண்டும்
உணவு வணிகர்களுக்கு பொறுப்பு உள்ளது. உங்களை நம்பி வரும் மக்களுக்கு, எவ்வகையிலும் ஆரோக்கிய சீர்கேடு வரக்கூடாது என்பதை உணர்ந்து, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.மூலப்பொருட்கள் கொள்முதல் முதல், உணவு கழிவுகளை அப்புறப்படுத்துவது வரை அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவையான அனைத்திற்கும் பதிவேடு பராமரிக்க வேண்டும். மீதமான உணவை தானமாக கொடுக்கலாம். எக்காரணம் கொண்டும், சமைத்த உணவை பிரிட்ஜில் வைத்து மறுநாள் கொடுக்கக்கூடாது. இதில் உருவாகும் பாக்டீரியா, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை, இறப்பு வரை கொண்டு செல்லும். சவர்மாவுக்கு மறைப்பு
உரிமம், சுத்தம், சுகாதாரம், தரம், பூச்சி மேலாண்மை, சுத்தமான நீர் பயன்பாடு, உணவு கையாளும் பணியாளர்களுக்கு மருத்துவ சான்றிதழ், பயிற்சி சான்று உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுவதை, ஓட்டல் உரிமையாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.காய்ச்சல், சளி போன்ற பாதிப்பு உள்ள பணியாளர்கள் சமைக்கவோ, பரிமாறவோ அனுமதிக்கக்கூடாது. சவர்மா தயாரிக்கும் போது, அதனை துாசு படாமல் கண்ணாடியை கொண்டு மறைவு ஏற்படுத்த வேண்டும்.எந்த ஒரு உணவு பொருட்களையும், திறந்தவெளியில் வைத்து தயாரிக்கக்கூடாது. உரிய வழிகாட்டுதல், பயிற்சி வழங்கிய பின்னரும் தவறுகள் நடந்தால், கட்டாயம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார். இக்கூட்டத்தில், மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவேல், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள், துரித உணவக உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
''எந்த ஒரு உணவுக்கும் முட்டை பயன்படுத்தும் போது, அதை தண்ணீரில் போட்டு பரிசோதிக்க வேண்டும். பாத்திரத்தில் தண்ணீரின் அடியில் இருக்கும் முட்டைகளை பயன்படுத்த வேண்டும். பாத்திரத்தின் மேலே மிதக்கும் முட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும். அதே போன்று, முட்டையை 15-10 நிமிடம் வேகவைத்தால் போதுமானது,'' என்றார் அனுராதா.
படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள ஸவர்மா பல நாட்களாக சூட்டிலே வெளியே இருக்கும். இதில் சால்மனெல்லா போன்ற கிருமிகள் உருவாக வாய்ப்பு அதிகம். இதை சாப்பிடாமல் இருப்பதே நலம்.