உக்கடம், வெள்ளலுார் குளங்களுக்கு தண்ணீர் இன்னும் வரலை! வாய்க்கால்களை முழுமையாக துார்வாராததால் அவலம்
கோவை : நொய்யல் ஆற்றில் இருந்து குளங்களுக்கு நீர் வரத்துவங்கியுள்ளது. வெள்ளலுார் ராஜவாய்க்கால் மற்றும் சேத்துமா வாய்க்கால் முழுமையாக துார்வாரப்படாததால், உக்கடம் மற்றும் வெள்ளலுார் குளங்களுக்கு இன்னும் தண்ணீர் வந்தடையவில்லை.மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்வதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சித்திரைச்சாவடி அணைக்கட்டு பகுதியில், வினாடிக்கு, 650 கன அடி தண்ணீர் ஆற்றில் செல்கிறது; சித்திரைச்சாவடி வாய்க்கால் மற்றும் குனியமுத்துார் வாய்க்காலில் வினாடிக்கு, 50 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன.பேரூர் சுண்டக்காமுத்துார் குளத்தில் இருந்து குனியமுத்துார் செங்குளத்துக்கு தண்ணீர் செல்லும் வழித்தடத்தில் சாரப்பண்ணை பகுதியில் அடைப்பு ஏற்பட்டது. கிருஷ்ணாம்பதி குளத்துக்கு தண்ணீர் கொண்டு வர, சித்திரைச்சாவடி வாய்க்கால் துார்வாரும் பணியை மாநகராட்சி மேற்கொள்கிறது. உக்குளம், கோளராம்பதி, நரசாம்பதி, குனியமுத்துார் செங்குளம், குறிச்சி குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது.உக்கடம் பெரிய குளம் மற்றும் வெள்ளலுார் குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. ஆனால், ஆண்டிபாளையம் பிரிவு முதல் உக்கடம் பெரிய குளம் வரையிலான சேத்துமா வாய்க்கால் இன்னும் முழுமையாக துார்வாரப்படவில்லை.ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில், வளர்ந்திருந்த புதர்கள் அகற்றப்பட்டதால் வாய்க்காலில் தண்ணீர் வருகிறது. செல்வபுரம் முத்துசாமி காலனி விரிவு பகுதிக்கு பின்புற பகுதிகளில், வாய்க்கால் இன்னும் துார்வாரப்படவில்லை.குளத்துக்கு தண்ணீர் வரும் பகுதியில் இருந்த புதர்கள் நேற்று அகற்றப்பட்டன. இருப்பினும் உக்கடம் பெரிய குளத்துக்கு நேற்று மாலை வரை தண்ணீர் வந்தடையவில்லை. இதேபோல், வெள்ளலுார் ராஜவாய்க்காலுக்கு சிறிதளவு தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.வாய்க்கால் வழிநெடுக புதர்மண்டி இருக்கிறது. நாணல் புற்கள், ஆகாயத்தாமரைகள் வளர்ந்திருப்பதால், குளத்துக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் இருக்கிறது. அதேநேரம், நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.மாநகர பகுதிகளில் உள்ள குளங்களில், தேங்கியுள்ள பழைய நீரை வெளியேற்றி விட்டு, ஆற்றில் வரும் புது வெள்ளத்தை தேக்க, மாநகராட்சி அதிகாரிகளும், பொதுப்பணித்துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, ''உக்கடம் மற்றும் வெள்ளலுார் குளங்களுக்கு, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பழைய தண்ணீரை வெளியேற்றி விட்டு, புது வெள்ளம் தருவிக்கப்படும். வாய்க்காலில் உள்ள அடைப்புகள் நீக்கும் பணி நடந்து வருகிறது,'' என்றார்.