நீர்மட்டம் உயர்வு; மின் உற்பத்தி அதிகரிப்பு
வால்பாறை; சோலையாறு அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், தினமும், 109 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.வால்பாறையில் ஆண்டு தோறும் பெய்யும் பருவமழையை கருத்தில் கொண்டு, காடம்பாறை நீர்தேக்க மின் திட்டத்தின் கீழ், நாள் தோறும் சுழற்சி முறையில், 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.இதே போல், மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில், 84 மெகாவாட் மின் உற்பத்தியும், கேரள சோலையாறில், 25 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்யும் நிலையில், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான சோலையாறு அணை, கடந்த, 26ம் தேதி நிரம்பியது. இதனையடுத்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தொடர் மழையால் பிற அணைகளும் நிரம்பி வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதனை தொடர்ந்து, மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில், 84 மெகாவாட் மின் உற்பத்தியும், கேரள சோலையாறு மின் உற்பத்தி நிலையத்தில், 25 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 161.10 அடியாக இருந்தது. அணைக்கு, வினாடிக்கு, 3,643 கனஅடி தண்ணீர் வரத்தாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 2,077 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்படுகிறது. இதே போல், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 57 அடியாகவும் உயர்ந்தது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழையவு (மி.மீ.,) வருமாறு:சோலையாறு - 6, பரம்பிக்குளம் - 18, ஆழியாறு - 5.6, வால்பாறை - 42, மேல்நீராறு - 47, கீழ்நீராறு - 43, காடம்பாறை - 13, சர்க்கார்பதி - 13, துாணக்கடவு - 8, பெருவாரிப்பள்ளம் - 10, மேல்ஆழியாறு - 7, நவமலை - 3, மணக்கடவு - 23, வேட்டைக்காரன்புதுார் - 20, பொள்ளாச்சி - 7, நல்லாறு - 6, நெகமம் - 8.8 என்ற அளவில் மழை பெய்தது.