குடிநீர் குழாய் உடைப்பு: தற்காலிகமாக சீரமைப்பு
வால்பாறை; வால்பாறை நகருக்கு, 8 கி.மீ., தொலைவில் உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் குழாய் வாயிலாக குடிநீர் விநியாகம் செய்யப்படுகிறது.கடந்த வாரம், குழாயில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி ரோட்டில் சென்றது. இந்நிலையில் சேதமடைந்த குழாய்கள் சீரமைக்கும் பணி நடந்தது.இந்த பணிக்காக, நடுமலை செல்லும் ரோட்டை தோண்டி, சேதமடைந்த குழாய் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.பொதுமக்கள் கூறுகையில், 'குடிநீர் குழாயை மாற்றி அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பழைய குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகிறது.நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்களுக்கு முறையாக குடிநீர் கிடைப்பதில்லை. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, கருமலையில் இருந்து வால்பாறை வரை புதிதாக குழாய் அமைக்க வேண்டும்,' என்றனர்.நகராட்சி கமிஷனர் ரகுராமனிடம் கேட்ட போது, ''குடிநீர் அழுத்தம் காரணமாக, சில இடங்களில் குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகியது. நீர்க்கசிவு இருந்த இடத்தில், 'வெல்டிங்' செய்யப்பட்டு, தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. விரைவில், புதிதாக குழாய் பதிக்கும் பணி நடைபெறும்,'' என்றார்.