உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு; அலைமோதும் பொதுமக்கள்

கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு; அலைமோதும் பொதுமக்கள்

இடையூறாக வாகனங்கள்

உடுமலை போலீஸ் டி.எஸ்.பி., அலுவலகம் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கனகராஜ், உடுமலை.

குடிநீர் தட்டுப்பாடு

உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், கூட்டு குடிநீர் திட்டத்தில் தொடர்ந்து மின்வெட்டு பிரச்னை ஏற்படுவதால், கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளும் இப்பிரச்னை குறித்து கண்டுகொள்ளாமல் உள்ளனர். 13 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விடப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.- அருண்குமார், பெரியகோட்டை.

'குடி' மகன்கள் தொல்லை

உடுமலை, பசுபதி வீதியில் உள்ள டாஸ்மாக் கடையால், அப்பகுதி முழுவதும் 'குடி'மகன்களின் இடமாக மாறிவிட்டது. ரோட்டில் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில், 'குடி' மகன்கள் நிலையில்லாமல் மோதும் வகையில் நடந்துசெல்கின்றனர். இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.- வானதி, உடுமலை.

ரோட்டை சரிசெய்யுங்க

ஜல்லிபட்டி ஊராட்சி ஓனாக்கல்லுார் மீனாட்சி நகரில் ரோடு குண்டும் குழியுமாகி உள்ளது. மழைநீர் தேங்கி ரோடு முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் தடுமாறி கீழே விழுகின்றனர். வாகன ஓட்டுநர்களும் செல்வதற்கு முடியாமல் விபத்துக்குள்ளாகின்றனர்.- செல்வம், ஓனாக்கல்லுார்.

தெருவிளக்குகள் எரிவதில்லை

உடுமலை, பழனியாண்டவர் நகரில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் பொதுமக்கள் ரோட்டில் தடுமாறி செல்ல வேண்டியுள்ளது. குழந்தைகள் வெளியில் சென்று வருவதற்கும் பாதுகாப்பில்லாமல் உள்ளது.- ஜெயக்குமார், உடுமலை.

அடையாளம் இல்லை

உடுமலை, காந்திநகர் இரண்டாவது வீதியில் ரோட்டில் உள்ள வேகத்தடைகள் அடையாளம் இல்லாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டுநர்கள் வேகத்தடை இருப்பதை அறியாமல் வந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, வேகத்தடைகளில் அதிகாரிகள் அடையாளமிட வேண்டும்.- ஜெயச்சந்திரன், உடுமலை.

புதரை அகற்றுங்க!

வடசித்தூர் - மஞ்சம்பாளையம் செல்லும் ரோட்டில் அதிக அளவு செடிகள் முளைத்து, ரோட்டை புதர் ஆக்கிரமித்துள்ளது. இதனால் ரோடு குறுகலாகவும், விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் இவ்வழியில் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, ரோட்டோரத்தில் உள்ள புதரை அகற்ற வேண்டும்.- -சக்தி, நெகமம்.

நிழற்கூரை அமைக்கணும்!

பொள்ளாச்சி, தேர்முட்டி பஸ் ஸ்டாப் இருந்த இடத்தில், தற்போது டீக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ் பயணியர் அவதிப்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில், இங்கு உடனடியாக நிழற்கூரை அமைக்க வேண்டும்.- -ராஜேந்திரன், பொள்ளாச்சி.

மீண்டும் சேதம்

கிணத்துக்கடவு மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள, பொள்ளாச்சி செல்லும் சர்வீஸ் ரோடு அடிக்கடி சேதமடைந்து வருகிறது. இதை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது சரி செய்தாலும் மீண்டும் சேதமடைந்து வருகிறது. இதற்கு தேசிய நெடுஞ்சாலை துறையினர் நிரந்தர தீர்வு காண வேண்டும்.-- -சந்தோஷ், கிணத்துக்கடவு.

வேகத்தடை தேவை

கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாப் பகுதியில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், அதிகளவு போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க, சர்வீஸ் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்.-- -சரவணன், கிணத்துக்கடவு.

மின்கம்பத்தை மாற்றுங்க!

பொள்ளாச்சி, 33வது வார்டு, மருதமலை ஆண்டவர் லே--அவுட்டில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதை மாற்றி அமைக்கக்கோரி பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த பலனும் இல்லை. எனவே, அசம்பாவிதம் ஏதேனும் நிகழ்வதற்குள் இந்த மின்கம்பதை மாற்றம் செய்ய வேண்டும்.- -ராஜ், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ