உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு அடி நிலம் கூட தர மாட்டோம்; விவசாய கூட்டமைப்பினர் ஆவேசம்

ஒரு அடி நிலம் கூட தர மாட்டோம்; விவசாய கூட்டமைப்பினர் ஆவேசம்

அன்னுார்; 'பசுமைவழிச் சாலைக்கு ஒரு சதுர அடி விவசாய நிலம் கூட தர மாட்டோம்,' என, விவசாய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையத்தில் துவங்கி, கோவில்பாளையம், அன்னுார், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி வழியாக கர்நாடக எல்லை வரை, ஏற்கனவே உள்ள சாலைக்கு இணையாக 2 கி.மீ., தொலைவில் புதிதாக புறவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.மத்திய அரசு இதற்காக நிலம் கையகப்படுத்த, 640 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. சாலை அமையும் இடத்தில் உள்ள நிலங்கள் 2022 பிப்., முதல் அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலம் கையகப்படுத்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என கோவை கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கோவை-சத்தி பசுமை வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை : கோவை-சத்தி பசுமைவழிச் சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படும் என்னும் தகவல் விவசாயிகளையும், குடியிருப்பு வாசிகளையும் கொந்தளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே உள்ள சாலையை விரிவுபடுத்தினால் போக்குவரத்து நெரிசல் தீரும். நான்கு வழிச்சாலையாக பயன்படுத்தலாம்.விரிவுபடுத்த முடியாத இடங்களில் மேம்பாலம் அமைக்கலாம். கிணத்துக்கடவு உள்பட பல இடங்களில் இந்தத் திட்டத்திற்காக ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் கையகப்படுத்தப்படும் நிலத்தின் இருபுறமும் மேலும் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் விவசாயிகள் தங்கள் சொந்த நிலத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். ஏற்கனவே கோவை கலெக்டரை பலமுறை நேரில் சந்தித்து விவசாய நிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி மனு அளித்துள்ளோம்.இந்நிலையில் கடந்த 26ம் தேதி அன்னுாரில் கலெக்டரிடம் மனு அளிக்க சென்ற போது, 'நீங்கள் பசுமைவழிச் சாலை வேண்டும் என்கிறீர்களா, வேண்டாம் என்கிறீர்களா என்று கேட்டது எங்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.விவசாயிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து அடுத்த கட்ட போராட்டத்தை விரைவில் அறிவிக்க உள்ளோம். எந்த காரணத்தை கொண்டும் ஒரு சதுர அடி விவசாய நிலத்தை கூட பசுமைவழிச் சாலைக்கு தர மாட்டோம். அரசு ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தவும் மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை