மேற்கு புறவழிச்சாலை முதல் பேக்கேஜ் ஜரூர் : மைல்கல் பாலம் தவிர்த்து நவ.,க்குள் முடிக்க இலக்கு
கோவை: கோவை - பாலக்காடு ரோட்டில், மதுக்கரை அருகே மைல்கல் பகுதியில் துவங்கி, நரசிம்மநாயக்கன் பாளையம் வரை, 32.43 கி.மீ., துாரத்துக்கு மேற்குப்புறவழிச்சாலை மாநில நெடுஞ்சாலைத்துறையால் அறிவிக்கப்பட்டது. இப்பணி, மூன்று 'பேக்கேஜ்'களாக பிரிக்கப்பட்டது. அதில், மைல்கல் முதல் மாதம்பட்டி வரை, 11.80 கி.மீ., வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜூலைக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. சில பணிகள் பாக்கியிருப்பதால், நவ., இறுதிக்குள் முடிக்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது: மைல்கல் பகுதியில் 600 மீட்டர் துாரத்துக்கு சாலை அமைக்க வேண்டும். தார் ரோடு போடும் பணி நடந்து வருகிறது. இறுதியாக, கடைசி லேயர் போடப்படும். அடுத்த கட்டமாக, பெயின்ட் அடிப்பது, கோடு போடுவது, போர்டுகள் வைக்கும் பணி மேற்கொள்ளப்படும். மைல்கல் மற்றும் மாதம்பட்டி சந்திப்பில் மேம்பாலங்கள் கட்ட வேண்டும். மாதம்பட்டியில் மேம்பாலம் கட்டினாலும் பயன்படுத்த வாய்ப்பில்லை. இன்னும் 2வது பேக்கேஜ் வேலை துவங்காததால், மேற்குப்புறவழிச்சாலையில் வருவோர் சிறுவாணி ரோட்டில் மட்டுமே இணைய முடியும். அதனால், சர்வீஸ் ரோடு மேம்படுத்தப்படும். 2வது பேக்கேஜ் வேலை முடிந்தால் மட்டுமே மாதம்பட்டி பாலம் பயன் படுத்த முடியும். மைல்கல் பாலம் பணி முடிய இன்னும் சில மாதங்களாகும். என்றாலும் கூட, சர்வீஸ் ரோடு வழியாக வந்து, மேற்குப்புறவழிச்சாலையை பயன்படுத்தலாம். இரு மேம்பாலங்களையும் தவிர்த்து, மீதமுள்ள பணிகள் நவ., இறுதிக்குள் முடிக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.