தேர்தல் வாக்குறுதி என்னாச்சு; ஊர்ப்புற நுாலகர்கள் கேள்வி
கோவை; 2021 சட்டசபை தேர்தல் சமயத்தில் தி.மு.க., அளித்த வாக்குறுதிப்படி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென, ஊர்ப்புற நுாலகர்கள் கோரியுள்ளனர். தமிழ்நாடு பொது நுாலகத்துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நுாலகர்கள் நல அமைப்பின் மாநில துணை தலைவர் நாகராஜன் அறிக்கை: தமிழகத்தில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும், 1006 நுாலகர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென 15 ஆண்டுகளாக கோரி வருகிறோம். 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெளியிட்ட வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்ததும், சிறப்பு காலமுறை ஊதியதாரர்களை, காலமுறை ஊதியத்துக்கு மாற்றுவதாக கூறியிருந்தது. தற்போது தி.மு.க., ஆட்சி முடிந்து, அடுத்த தேர்தல் வரப்போகிறது. எங்கள் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மிக குறைந்த ஊதியத்தில், ஊர்ப்புற நுாலகர்கள் பணிபுரிகின்றனர். மாதம் ஒருமுறை எடுக்கும் சாதாரண விடுப்பு மட்டுமே உள்ளது. மருத்துவ விடுப்பு உள்ளிட்ட வேறெந்த விடுப்பும் இல்லை. குறைந்த ஊதியம் என்பதால், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஊர்ப்புற நுாலகங்களை கிளை நுாலகங்களாக தரம் உயர்த்த வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் நுாலகர்களுக்கு, உடனடியாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.