குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்யணும்! பெற்றோருக்கு டாக்டர்கள் அன்பான அறிவுரை
கோவையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், மாலை நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்த திடீர் காலநிலை மாற்றத்தால் சளி, இருமல், காய்ச்சல் என பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிப்பு அடைந்து வருகின்றனர்.மழைக்காலங்களில் பரவக்கூடிய நோய்கள் குறித்தும், பள்ளி குழந்தைகளை பாதுகாக்க வீடுகளில் பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், ஆயுர்வேத டாக்டர் விஜயப்பிரியா மற்றும் ஹோமியோபதி டாக்டர் மீனாட்சி ஆகியோர் சில ஆலோசனைகளை கூறினர்.ஆயுர்வேத டாக்டர் விஜயப்பிரியா:சளி, இருமல், காய்ச்சல் என்பது மழைக்கால நோயாக இருந்து வருகிறது. மழைக் காலத்திற்கு ஏற்றவாறு உணவுகளை பின்பற்ற வேண்டும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்து, சூடான, வெதுவெதுப்பான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சூப், துாதுவளை ரசம், துவையல் சமைத்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு சளி பிடித்தால் அதை உடல், தும்மல் வழியாக வெளியேற்றும் அல்லது இருமல் வந்து கபமாக வெளியேற்றும். இந்த இரண்டின் வாயிலாகவும் வெளியேறவில்லை என்றால், காய்ச்சல் அல்லது வயிற்று போக்கு ஏற்பட்டு குணப்படுத்தும்.உடனே மருத்து கொடுக்கக்கூடாது. 100 டிகிரி வரை குழந்தைகளை காய்ச்சல் எதுவும் செய்யாது. உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அதனை சரி செய்யும். பெற்றோர் குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் இருக்கும்போது துாதுவளை, கற்பூரவள்ளி, வெற்றிலை, துளசி சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் சாரை எடுத்து, ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து கொடுத்தால் சரியாகி விடும். துணியை தண்ணீரில் நனைத்து உடலை துடைத்து விடவேண்டும். 100 டிகிரிக்கு மேல் சென்றால் டாக்டரை அணுக வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.ஹோமியோபதி டாக்டர் மீனாட்சி: மழைக்காலங்களில் குழந்தைகள் நனையாமல் பாதுகாக்க வேண்டும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் குடை, மழை கோட்டு, ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும். முடிந்தால் பெற்றோர், குழந்தைகளை அழைத்துச் சென்று பள்ளிக்கு விட்டு வரலாம். ஏதாவது சூழ்நிலையில் குழந்தைகள் நனைந்து வந்தால், வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும்.தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். கைகளை சுத்தமாக கழுவி உணவருந்த வேண்டும். மழைக்காலங்களில் வெளியே வாங்கி வரும் காய்கறிகளை உப்பு நீரால் கழுவி சமைக்க வேண்டும். மழை பெய்தால் வீட்டை சுற்றி பார்த்து தண்ணீர் தேங்கி இருந்தால் அதனை அகற்ற வேண்டும். குழந்தைகளை கொசு கடிக்காமல் பாதுகாக்க வேண்டும்.இஞ்சி, பூண்டு, குறுமிளகு ஆகியவற்றால் தயாரித்த சூப் அடிக்கடி கொடுப்பது நல்லது.வீட்டிற்குள் ஸ்கிப்பிங், சைக்கிளிங் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். மழைக்கால நோய்களுக்கு பிரத்யேகமாக ஹோமியோபதியில் சில மருந்துகள் உள்ளன. டாக்டரின் பரிந்துரையின் பேரில் அவற்றை எடுத்துக் கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.