உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காந்தையாற்றுக்கு எப்போது விமோசனம்? ஆபத்தான நிலையில் பரிசல் பயணம்

காந்தையாற்றுக்கு எப்போது விமோசனம்? ஆபத்தான நிலையில் பரிசல் பயணம்

மேட்டுப்பாளையம்,; சிறுமுகை காந்தையாற்றின் குறுக்கே கட்டப்படும் உயர்மட்ட பாலத்துக்கு, கடலில் பாலம் கட்டும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பாலம் கட்ட, மலைவாழ் மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்டது காந்தவயல். காந்தையூர், உலியூர், மொக்கை மேடு. லிங்காபுரத்துக்கும், -காந்தவயலுக்கும் இடையே காந்தையாறு ஓடுகிறது. தமிழக அரசு காந்தையாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட, 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. கடந்த, 2023ம் ஆண்டு உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் துவங்கின. இரண்டு ஆண்டுகளில் பாலம் கட்டி முடிக்கதிட்டமிடப்பட்டது.பணிகள் விரைவாக செய்திருந்தால், ஓரளவு பாலம் கட்டும் பணிகள் நடந்திருக்கும். ஆனால் போதிய பணி ஆட்களும், இயந்திரங்களும் இல்லாமல், குறைவான ஆட்களை வைத்து, பாலம் கட்டுமான பணிகள் நடக்கின்றன. பருவமழையின் காரணமாக பெய்த மழையால், பவானி ஆறு மற்றும் காந்தையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பவானிசாகர் அணையில், 97 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததால், காந்தையாற்றில், 30 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பாலம் கட்டும் பணிகள் பாதியில் நின்றுள்ளன. தற்போது மக்கள் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர்.மலைவாழ் மக்கள் கூறியதாவது:காந்தையாற்றில் தண்ணீர் தேங்கியதால், பாலம் கட்டும் பணிகள் நின்றுள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர், மோட்டார் படகில் பயணம் செய்து வருகின்றனர். பொதுமக்கள் விவசாயிகள், ஆபத்தான நிலையில் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர்.புதிய பாலம் கட்டும் பணிகள் துவங்குவதற்கு முன், பழைய பாலம் வரை தார் சாலை இருந்தது. பவானிசாகர் அணையில், 97 அடிக்கு தண்ணீர் உயர்ந்தால், பழைய உயர் மட்ட பாலமும், சிறிது தூரம் தார் சாலையும் மட்டும் தண்ணீரில் மூழ்கும். அப்போது, 50 மீட்டர் தூரத்திற்கு மட்டுமே பரிசலில் பயணம் செய்து வந்தோம். ஆனால் தற்போது புதிய பாலம் கட்டும் பணிகள் துவங்கிய போது, தார் சாலையை பாதி அளவுக்கு மேல் இடித்து விட்டனர்.அதனால் அரை கிலோ மீட்டருக்கு, தற்போது தண்ணீரில் ஆபத்தான நிலையில், பரிசலில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆற்றில் தேங்கியுள்ள தண்ணீர் வடிவதற்கு ஆறு மாத காலம் ஆகும். மழை வராமல் இருந்தால், தண்ணீர் வற்றிவிடும். அதற்குள் மழை வந்தால் மீண்டும் ஆற்றில் தண்ணீர் உயர்ந்து விடும்.எனவே, கடலில் பாலம் கட்டும் தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, காந்தையாற்றில் தேங்கி உள்ள தண்ணீரில் உயர் பாலம் கட்ட வேண்டும்.இவ்வாறு மலைவாழ் மக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ