புதிய ரேஷன் கடை எப்போது திறக்கப்படும்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லை அருகே ஜடையம்பாளையம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள ரேஷன் கடையில் பத்துக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.இதில் சில குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த மக்கள், ஜடையம்பாளையம் ரேஷன் கடைக்கு இரண்டு கிலோ மீட்டர் சென்று பொருட்களை வாங்கி வர வேண்டும். அதனால் இப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடை கட்டும்படி, கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.இதை அடுத்து ஊராட்சியின் சார்பில் கடந்த ஜனவரி மாதம், குறிஞ்சி நகரில், 12.65 லட்சம் ரூபாய் செலவில், புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இந்த ரேஷன் கடைக்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும் ரேஷன் கடை கட்டி ஐந்து மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் திறக்காமல் உள்ளது. இதுகுறித்து குறிஞ்சி நகர் மக்கள் கூறியதாவது:ஊராட்சியின் சார்பில் கட்டிய ரேஷன் கடை, கூட்டுறவு சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இன்னும் கூட்டுறவு சங்க நிர்வாகம், கடையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ரேஷன் கடையை திறக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.