போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எப்போது?
மேட்டுப்பாளையம், ; மேட்டுப்பாளையம் நகரில், தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு, தீர்வு எப்போது கிடைக்கும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலில் அமைந்துள்ளது. நகரில் உள்ள அன்னூர், காரமடை, சிறுமுகை, ஊட்டி ஆகிய நான்கு சாலைகளும், 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாகும். காலப்போக்கில் சாலையை ஆக்கிரமிப்புகள் செய்து, கடைகளை விரிவுபடுத்தி கட்டியதால், சாலைகள் குறுகியது. மேலும் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் அன்னூர், காரமடை ஆகிய சாலைகள் வழியாக ஊட்டி செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட மூன்று மடங்கிற்கு அதிகமாக உள்ளன. சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால், ஒரே நேரத்தில் அதிகமான வாகனங்கள் வரும் பொழுது, நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசல் சீரடைய இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு மேலாகிறது. இதனால் உள்ளூரில் வசிக்கும் பொதுமக்கள் அவசரத்திற்கு மருத்துவமனைக்கோ, கடைகளுக்கோ வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் தினம், தினம் மேட்டுப்பாளையம் நகர மக்களும், சுற்றுலா பயணிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமம் அடைந்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். எனவே உடனடியாக மேட்டுப்பாளையத்தில் பைபாஸ் சாலை அமைக்கவும், நகரில் சாலைகளில் உள்ள ஆக்கிரம்புகளை அகற்றி, விரிவாக்கம் செய்யவும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.