| ADDED : டிச 04, 2025 06:43 AM
பொள்ளாச்சி: 'பி.ஏ.பி. முதலாம் மண்டல பாசனத்துக்கு பொங்கலுக்கு முன்பே தண்ணீர் வழங்க வேண்டும்,' என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. பாசனத்தில் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு பருவமழை கை கொடுத்ததால் கடந்த ஜூலை மாதம், 27ம் தேதி நான்காம் மண்டல பாசனத்துக்கு, 135 நாட்களில் ஐந்து சுற்று தண்ணீர் விட அரசாணை பெறப்பட்டது. அதன்படி நீர் வினியோகிக்கப்பட்டு, ஐந்தாவது சுற்று வழங்கப்படுகிறது. இந்நிலையில், முதலாம் மண்டல பாசனத்துக்கு தாமதம் செய்யாமல், பொங்கலுக்கு முன்பே தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் வினியோகம் வரும் 9ம் தேதியுடன் நிறைவடைகிறது. முதலாம் மண்டல பாசனத்துக்கு வழக்கமாக ஜன. மாதம் பொங்கல் பண்டிகை நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும். தற்போது காண்டூர் கால்வாயில் சில பகுதிகள், பரம்பிக்குளம் பிரதான கால்வாயில் ஒரு சில இடங்களில் பணிகள் மேற்கொண்ட பின், ஜன. மாதம் மூன்றாவது வாரத்தில் தான் தண்ணீர் திறக்கும் நிலை உள்ளதாக தெரிகிறது. எதுவாக இருப்பினும், 135 நாட்களுக்குள் தண்ணீர் வழங்கும் சுற்றுகளை முடிவு செய்து அடுத்த மண்டலத்துக்கான தண்ணீர் திறப்பை திட்டக்குழுவும், நீர்வளத்துறை அதிகாரிகளும் முடிவு செய்ய வேண்டும். முதலாம் மண்டல பாசன காலம் கடுமையான வெயில் காலத்தில் வருவதால், பொங்கலுக்கு முறையாக தண்ணீர் கொடுத்தால் தான் பயனாக இருக்கும்.எனவே, திட்டக்குழு தலைவர், பகிர்மான குழுதலைவர்கள் உடனடியாக நீர்வளத்துறை அதிகாரிகளோடு கூட்டம் நடத்தி ஜன. மாதம் பொங்கலுக்கு முன்னதாக தண்ணீர் வழங்க கருத்துருவை அனுப்பி, அரசாணை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.