கட்டடங்களை டிரோன் சர்வே செய்வது ஏன்? விளக்குகிறார் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்
கோவை : ஏதோ நம் பக்கத்து வீட்டில், பைலுடன் ஆண்டுக்கணக்கில் வேலை தேடியபடி இருக்கும் இளைஞரைப் போல் சிம்பிளாக இருக்கிறார், நமது மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன். மாநகராட்சியின் ஒவ்வொரு அங்குலத்தையும் 'ஸ்டடி' செய்து வைத்திருக்கிறார். கேட்கும் கேள்விகள் அத்தனைக்கும் தயக்கமின்றி, உடனே வந்து விழுகின்றன பதில்கள்.நமது நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி:கோவையில் புதிதாக ரோடு போட, தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கியதே. இதுநாள் வரை எவ்வளவு ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. இன்னும் பல இடங்களில் ரோடு குண்டும் குழியுமாக இருக்கின்றனவே?2022-23, 2023-24, 2024-25 நிதியாண்டுகளில், 5,215 இடங்களில், 860.69 கி.மீ., துாரத்துக்கு ரோடு போடுவதற்கு ரூ.415 கோடி ஒதுக்கப்பட்டது. 2022-23, 2023-24ம் நிதியாண்டில் ஒதுக்கிய பணிகள் முழுமையாக முடிந்து விட்டன.கமிஷனராக பொறுப்பேற்ற போது, 30 சதவீத ரோடு பணி முடிந்தது. மீதமுள்ள, 70 சதவீத பணி மற்றும், 2024-25 நிதியாண்டில், 1,269 இடங்களில் ரோடு போட, ரூ.100.95 கோடி ஒதுக்கப்பட்டது; 76 சதவீத பணிகள் முடிந்திருக்கின்றன; இன்னும், 24 சதவீத பணிகள் உள்ளன.பாதாள சாக்கடை குழாய் பதிப்பு, சூயஸ் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக வெட்டப்பட்ட ரோடுகளை சரி செய்வதற்காக, 300 கோடி ரூபாய் கேட்க தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பவுள்ளோம்.பாதாள சாக்கடை குழாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் பொத்துக்கொண்டு ரோட்டில் வழிந்தோடுகிறது; இதற்கு தீர்வே இல்லையா...?பாதாள சாக்கடை திட்டம் எட்டு ஜோன்களாக பிரிக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது. ஜோன் 1ல் உள்ள பழைய மாநகராட்சி பகுதியில், 1960களில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டிருக்கிறது. அந்தக்காலத்தில் இருந்த, குடியிருப்புக்கேற்ப குழாய் பதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, 30 ஆண்டுகளுக்கு திட்டமிட்டு, குழாய் பதிப்பது வழக்கம். இப்போது, 60 ஆண்டுகளை கடந்து விட்டது. பழைய குழாய்களை மாற்றியமைக்க வேண்டும். ஆலோசனை நிறுவனம் நியமித்திருக்கிறோம். நீண்ட காலத்துக்கு பயனளிக்கும் வகையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க உள்ளோம்.தற்போதைக்கு அடைப்பு நீக்க, 'சூப்பர் சக்கர்' இயந்திரம் புதிதாக கொள்முதல் செய்ய, ரூ.4 கோடி தேவைப்படும். 'ஸ்வட்ச் பாரத்' திட்டத்தில் ரூ.2 கோடி ஒதுக்கினால், தமிழக அரசிடம் ரூ.2 கோடி கேட்டிருக்கிறோம். திருப்பூரில் இருந்து ஒரு வாகனம், வாடகை அடிப்படையில் தருவித்திருக்கிறோம்; நல்ல பயன் கிடைத்திருக்கிறது; மூன்று மாதத்துக்கு பயன்படுத்த உள்ளோம்.கட்டடங்களை மறுஅளவீடு செய்ய, 'டிரோன் சர்வே' செய்கிறீர்கள். அதன் மூலம் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைத்தாலும், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கவுன்சிலர்கள் கூறுகின்றனரே...?பல வீடுகள் வணிக கட்டடமாக மாறியிருக்கின்றன. கீழே வணிக கட்டடம் மேலே வீடு; பின்புறம் வீடு முன்புறம் வணிக கட்டடமாக மாற்றியிருக்கின்றனர். வாடகையாக பல லட்சம் ரூபாய் வாங்குகின்றனர். அரசாணைப்படி, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்த வேண்டும்.'பீல்டு சர்வே' என்ற அடிப்படையில், ஆய்வு செய்கிறோம். 'டிரோன் சர்வே'யில் எந்தெந்த வீடுகள் கூடுதல் பரப்புக்கு மாற்றப்பட்டு இருக்கின்றன என தெரிய வரும். அதன்பின், பில் கலெக்டர்கள் நேரடியாக சென்று அளந்து, நோட்டீஸ் கொடுக்கிறோம்; ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க, 15 நாட்கள் அவகாசம் கொடுக்கிறோம். ஆட்சேபனை வந்தால் மீண்டும் ஆய்வு செய்கிறோம். ஒரு வார்டில் அதிகபட்சம், 10 கடிதமே வந்திருக்கிறது.இதுவரை, 6 வார்டுகளில் சர்வே முடிந்திருக்கிறது; 5.5 கோடி ரூபாய் வருவாய் ஓராண்டு அதிகரிக்கும். வணிக பகுதிகள் அதிகமுள்ள, 40 வார்டுகளில் ஆய்வு செய்கிறோம். இதன் மூலம், 15 - 20 கோடி ரூபாய் வரை கூடுதல் வருவாய் கிடைக்கும். 10 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாத வணிக கட்டடத்தை கண்டுபிடித்துள்ளோம்.ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, மாமன்றம் நிர்ணயித்த சம்பளம் வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருக்கிறதே...ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்ததால், சம்பளத்தை மாற்றியமைக்க முடியாத சூழல் இருந்தது. தற்போது புதிதாக டெண்டர் கோர இருக்கிறோம். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்போது, சம்பளத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அச்சம்பளத்தை ஒப்பந்த நிறுவனம் வழங்கினால் மட்டும், அடுத்த மாத பில் விடுவிக்கப்படும்.கவுன்சிலர்கள் வேலை சொன்னால் அதிகாரிகள் செய்வதில்லையே...?
'மில்லிங்' அவசியமில்லை
புதிதாக ரோடு போடும்போது, பழைய ரோட்டை பெயர்த்தெடுக்காமல், 'மில்லிங்' என்ற பெயரில், சுரண்டி எடுத்துவிட்டு, ரோடு போடப்படுகிறதே...?அனைத்து ரோடுகளையும் 'மில்லிங்' செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ரோட்டுக்கு மேல் ரோடு போட்டு, 'திக்னஸ்' இருந்தால் மட்டுமே வாகனங்கள் செல்லும்போது தரமாக இருக்கும். 'திக்னஸ்' குறைவாக ரோடு இருந்தால், அழுத்தம் தாங்காமல் கீழிறங்கி விடும். ரோட்டின் 'திக்னஸ்' ஆய்வு செய்த பிறகே, 'மில்லிங்' செய்ய அனுமதி அளிக்கிறோம். முக்கியமான ரோடுகளாக இருந்தால் 'மில்லிங்' செய்வோம்; மற்ற இடங்களில் செய்ய தேவையில்லை.
சர்வே செய்வதன் பலன்
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கட்டடங்கள் மறுஅளவீடு செய்ய, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 'டிரோன் சர்வே' செய்த வகையில், 2.5 கோடி ரூபாய் கணக்கெழுதப்பட்டு, பணம் எடுக்கப்பட்டுள்ளதாமே...?'ஸ்மார்ட் சிட்டி' நிதியில், நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட, கட்டடங்களை அளவீடு செய்ய நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது; இதில், ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட கட்டடங்கள் அளவீடு செய்யப்பட்டதாக கணக்கெழுதப்பட்டிருக்கிறது. அதற்கான தொகை பெறப்பட்டுள்ளது. சர்வே செய்ததன் மூலம், சொத்து வரி வருவாய் எத்தனை கோடி ரூபாய் உயர்ந்தது என கேள்வி கேட்டிருக்கிறேன். இதற்கு முன் 'என்கொயரி' செய்தவர்களும் கேட்டிருக்கிறார்கள்; தணிக்கைத்துறையும் கேட்டிருக்கிறது.