மேலும் செய்திகள்
மர்ம விலங்கு தாக்கி 18 ஆடுகள் பலி
31-Mar-2025
அன்னுார்; அன்னுாரில், 20 ஆடுகள் பலியான தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் அகற்றினர். இதற்கான காரணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.அன்னுார், மேட்டுப்பாளையம் சாலையில், ரவிக்குமார் என்பவரின் தோட்டத்தில் ஆட்டுப்பண்ணை உள்ளது. நான்கு நாட்களுக்கு முன், மர்ம விலங்கு நள்ளிரவில் புகுந்து, 18 ஆடுகளை கடித்துக் கொன்றது.இரண்டு ஆடுகளை தூக்கிச் சென்றது. தகவல் அறிந்து வனத்துறையினர் வந்து அங்கு கால் தடங்களை ஆய்வு செய்தனர். ஐந்து கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். மீண்டும் கொட்டகையில் ஒரு கோழியை வைக்க அறிவுறுத்தினர்.இதையடுத்து அன்று இரவு கோழி வைக்கப்பட்டது. அடுத்த நாள் கோழியை காணவில்லை. இறகுகளும் ரத்தமும் மட்டுமே அங்கு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் மீண்டும் புகார் தெரிவித்தனர்.வனத்துறையினர் கண்காணிப்பு கேமராவில் உள்ள சிம்கார்டுகளை எடுத்துக் கொண்டு வேறு சிம் கார்டுகளை பொருத்தி சென்றனர்.அதன் பிறகு நேற்று முன்தினம் மாலை வந்த வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை கழற்றி எடுத்து சென்று விட்டனர்.இதுகுறித்து அப் பகுதி மக்கள் கூறுகையில், 'இறந்த ஆடுகளை கால்நடை துறையினர் பிரேத பரிசோதனை செய்து வனத்துறைக்கு அறிக்கை அளித்தனர். கண்காணிப்பு கேமராவில் இரண்டு நாட்களில் பதிவான காட்சிகள் குறித்தும் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்தும் பலமுறை கேட்டும் வனத்துறையினர் பதிலளிக்க மறுக்கின்றனர்.வந்தது எந்த விலங்கு என்று தெரியாமல் அச்சத்தில் உள்ளோம். இதுகுறித்து இப்பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.
31-Mar-2025