கணவன் இறந்தது தெரியாமல் 5 நாட்கள் உடனிருந்த மனைவி
கோவை: கணவன் இறந்து கிடந்தது தெரியாமல், ஒரே வீட்டில் ஐந்து நாட்களாக மனைவி வசித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கோவை, தெற்கு உக்கடம், கோட்டைபுதுார் காந்திநகரை சேர்ந்தவர் அப்துல்ஷா, 48. இவரது மனைவி சமீம் நிஷா, 42. தம்பதியின் மகன், ஷாருக்கான் மற்றும் மகள் அருகில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியுள்ளனர்.சில தினங்களுக்கு முன், அப்துல்ஷா வீட்டின் அருகில் குடியிருப்போர், ஷாருக்கானுக்கு போன் செய்து, 'உங்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது' என, தெரிவித்தனர். ஷாருக்கான் சென்று பார்த்த போது, படுக்கையறையில் அப்துல்ஷா படுத்திருந்தார். தாயிடம், துர்நாற்றம் குறித்து ஷாருக்கான் கேட்டதற்கு, அவர், 'எலி எங்காவது செத்து கிடக்கும்' என, தெரிவித்துள்ளார்.அப்துல்ஷா துாங்குவதாக நினைத்து, ஷாருக்கானும் சென்று விட்டார். நேற்று முன்தினம், கடும் துர்நாற்றம் வீசுவதாக, ஷாருக்கானுக்கு மீண்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஷாருக்கான் படுக்கையறையில் இருந்து அப்துல்ஷா எழுந்து வராததும், அங்கிருந்து துர்நாற்றம் வீசுவதையும் உணர்ந்தார். அவர் இறந்து ஐந்து நாட்களுக்கு மேல் ஆனதால், கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. அவர் இறந்தது தெரியாமல், அவரது மனைவி வீட்டிலேயே, ஐந்து நாட்களுக்கு மேல் கணவர் சடலத்துடன் வசித்து வந்துள்ளார். கடைவீதி போலீசார் விசாரிக்கின்றனர்.