மாட்டு தீவனங்களை ருசிக்கும் காட்டு யானைகள்
பெ.நா.பாளையம், ; சின்னத்தடாகம் வட்டாரத்தில் காட்டு யானைகள், தோட்டங்களில் வைக்கப்பட்டுள்ள மாட்டு தீவனங்களை தினமும் ருசிக்க தொடங்கியுள்ளன.கோவை வடக்கு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை ஓர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காட்டு யானைகளின் வரவை கட்டுப்படுத்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து பணியில் இருந்தாலும், காட்டு யானைகளின் வரவை முழுமையாக தடுக்க இயலவில்லை.தென்னங்கன்றுகள், வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை விரும்பி உண்டு வந்த காட்டு யானைகள், தற்போது தோட்டங்களில் வைக்கப்பட்டுள்ள இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தீவனங்களை விரும்பி உண்கின்றன. சின்னதடாகம் வட்டாரத்தில் பாப்பநாயக்கன்பாளையம், நஞ்சுண்டாபுரம், மடத்தூர், வரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் மெயின் ரோட்டில் காட்டு யானைகள் நடந்து செல்வது அதிகரித்துள்ளது. எனவே, துடியலூர் வழியாக சின்ன தடாகம், வீரபாண்டி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் நபர்கள் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், நள்ளிரவில் பயணத்தை தவிர்க்கும் படி வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.