உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானைச்சவாரி மீண்டும் துவங்கப்படுமா? சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு

யானைச்சவாரி மீண்டும் துவங்கப்படுமா? சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி; பசுமையான வனத்துக்குள் யானை மீது சவாரி செய்யும் காலம் மீண்டும் வருமா, என ஏக்கத்துடன் சுற்றுலா பயணியர் காத்திருக்கின்றனர். பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனப்பகுதி சுற்றுலா தலமாக உள்ளது. மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பிற மாவட்ட மக்கள், வெளி மாநிலம், வெளி நாடு சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். வனத்துறை சார்பில், தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு செயல்பட்ட யானை சவாரி சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தது. இதற்காக கும்கி யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 60 வயதுக்கு கீழ் உள்ள யானைகள் இதற்காக பழக்கப்படுத்தப்பட்டு, யானை சவாரி மேற்கொள்ளப்பட்டது. யானை மீது சுற்றுலா பயணியர் அமர்ந்து செல்வதற்கு ஏற்ற வசதியும்; யானைப்பாகன் கூட செல்லும் வசதியும் செய்து தரப்பட்டது.குறிப்பிட்ட துாரத்துக்கு சுற்றுலா பயணியர் அழைத்து செல்லப்பட்டனர். இதற்கு, நான்கு பேருக்கு 800 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இத்திட்டம் சுற்றுலா பயணியரிடம் நல்ல வரவேற்பை பெற்றது. டாப்சிலிப் வரும் 'குட்டீஸ்'கள் முதல், பெரியவர்கள் வரை யானை மீது அமர்ந்து காட்டை சுற்றி பார்த்தனர். இந்நிலையில், கடந்த, 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது, டாப்சிலிப்பில் யானை சவாரி நிறுத்தப்பட்டது. அதன்பின், அனுமதி கிடைக்காததால் மீண்டும் யானைச்சவாரி துவங்கவில்லை. ஆர்வத்துடன் வரும் சுற்றுலா பயணியர், ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். தற்போது யானைச்சவாரி நடத்தப்பட்ட இடம், புதர் மண்டி காணப்படுகிறது. சுற்றுலா பயணியர் கூறுகையில், 'அடர்ந்த வனப்பகுதியில், யானை மேல் அமர்ந்து செல்லும் அனுபவம் வாழ்வில் மறக்க முடியாத தருணமாகும்.தற்போது நினைவுகளில் மட்டுமே யானை சவாரி உள்ளது. நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இருந்த யானை சவாரிக்கு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் யானைச்சவாரி துவங்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை