கிடைக்குமா பேராசிரியர் அந்தஸ்து; அரசு கல்லுாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு அரசு கல்லுாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
கோவை; பாரதியார் பல்கலையின் கீழ், அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரிகளுக்கும் பேராசிரியர் அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.பல்கலை மானியக்குழு(யு.ஜி.சி.,) விதிமுறைகளின் படி, கல்லுாரிகளில் ஆசிரியர்கள், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என்ற மூன்று நிலைகளில் வகைப்படுத்தப்படுகின்றனர். கல்லுாரிகளில், 12 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணி புரிபவர், இணை பேராசிரியராகவும், அதன் பின் மூன்று ஆண்டுகள் பணிபுரிபவர், பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற தகுதியடைகின்றனர். அதன்பின், 10 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டு, ஆராய்ச்சி பிரிவில், 120 மதிப்பெண்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டி ஆகிய தகுதிகளை பெறுவோர், பேராசிரியராக பதவி உயர்வு பெறுவர்.மாநில அளவில், அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் பேராசிரியர் பதவி இதுவரை வழங்கப்படவில்லை. சமீபத்தில் பாரதியார் பல்கலையின் கீழ் தனியார் கல்லுாரிகளுக்கு பேராசிரியர் அந்தஸ்து வழங்கப்பட்டது பல்வேறு தரப்பில் வரவேற்பை பெற்றது. அதே போன்று, அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரிகளுக்கும் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மாநில துணைத் தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில்,''அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 30 ஆண்டுகள் பணிபுரிந்தும் பேராசிரியர் அந்தஸ்து வழங்கப்படவில்லை.அரசாணை எண், 5 வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன; ஆனால், நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. பேராசிரியர் அந்தஸ்து வழங்காமல் உள்ளதால், அரசு கல்லுாரிகளில் தகுதியான பலர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.தனியார் கல்லுாரிகளுக்கு வழங்கியதை வரவேற்கின்றோம்; அதே சமயம், அரசு அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கும் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும்,'' என்றார்.