பைபாஸ் சாலை கனவு திட்டமாகி விடுமா? நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் தவிப்பு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பைபாஸ் சாலை திட்டம், கனவு திட்டமாக உள்ளது. நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, எப்போது பைபாஸ் சாலை வரும் என, பொது மக்கள், சுற்றுலா பயணிகள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். கோவை, நீலகிரி மாவட்டங்களை இணைக்கும் இணைப்பு பாலமாக, மேட்டுப்பாளையம் நகரம் உள்ளது. தினமும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களும், நூற்றுக்கு மேற்பட்ட அரசு பஸ்களும் நீலகிரி மாவட்டத்திற்கு சென்று வருகின்றன. இதனால் மேட்டுப்பாளையம் நகரில், காலை, மாலையிலும், விடுமுறை நாட்களிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கடந்த, 2014ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, பைபாஸ் சாலை திட்டத்தை அறிவித்தார். அதிகாரிகள் நில அளவை செய்து, ஆர்ஜிதம் செய்ய பல ஆண்டுகளாக காலம் கடத்தி வந்தனர். திட்டம் அறிவித்து பல ஆண்டுகள் ஆனதால், நிலத்திற்கு வழங்கப்படும் தொகையின் மதிப்பும், பைபாஸ் சாலை அமைக்கும் திட்டத்தின் மதிப்பும், 600 கோடி ரூபாயாக உயர்ந்தது.பின்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 299 கோடி ரூபாயில் முடிக்க வேண்டிய பைபாஸ் சாலை திட்டம், 600 கோடியாக திட்ட மதிப்பீடு உயர்ந்ததால், தமிழக அரசு இத்திட்டத்தை செய்ய முடியாது என, மத்திய அரசிடம் ஒப்படைத்தது. தற்போது கோடை சீசன் துவங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விட்டதால், ஊட்டி செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதிப்படைவதோடு, உள்ளூர் பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே போலீஸ், நகராட்சி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் ஆகிய மூன்று துறைகளும் இணைந்து, கோவை, அன்னூர், சக்தி, ஊட்டி ஆகிய சாலைகளில் உள்ள ஆக்கிரப்புகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும். வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் எளிதில் சென்று வர, கூடுதலான போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசு, காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக, ஊட்டி சாலையில் சென்றடையும் வகையில், பைபாஸ் சாலை அமைக்க முடிவு செய்துள்ளது.பைபாஸ் சாலை அமையும் இடங்களை ஆய்வு செய்வது குறித்து, விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.,) தயார் செய்ய, டெண்டர் விடும் பணிகள் நடைபெறுகின்றன. அதன் பிறகு நிலம் கையகப்படுத்தி, பைபாஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.