கோவை -- மயிலாடுதுறை ரயில் இயக்கப்படுமா?
கிணத்துக்கடவு; கோவையில் இருந்து, மயிலாடுதுறைக்கு பகல் நேர ரயில் இயக்கக்கோரி ரயில் பயணியர் வலியுறுத்துகின்றனர். கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டுமென, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய ஐந்து மாவட்ட ரயில் பயணியர் நல சங்கம் சார்பில், தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதன்பின், திருச்சி ரயில்வே கோட்டம் சார்பில் ஓராண்டிற்கு முன், இந்த ரயில் சேவை தொடங்குவது குறித்து கருத்துரு தயார் செய்து, தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, சேலம் ரயில்வே கோட்டத்தில் நடந்த கோட்ட ரயில்வே பயணியர் ஆலோசனைக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போது, கோவையி ல் இருந்து கும்பகோணத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்து பயணியர் சென்று வருகின்றனர். இத்துடன், கோவை - மயிலாடுதுறை ரயிலை, பொள்ளாச்சி -- கோவை வழித்தடத்தில் இயக்கினால் பயணியர் பலர் பயனடைவர். எனவே, இந்த ரயில் சேவையை விரைவில் துவங்க வேண்டும், என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.