பயன்பாட்டுக்கு வருமா சமுதாய நலக்கூடம்
அன்னுார்; எல்.கோவில்பாளையத்தில், சமுதாய நலக்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்னுார், ஓதிமலை சாலையில், லக்கேபாளையம் கோவில்பாளையத்தில், சமுதாய நலக்கூடம் உள்ளது. பராமரிப்பில்லாத இந்த கூடத்திற்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆறு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில், சமுதாய நலக்கூடத்தை புதுப்பிக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. தற்போது புதுப்பிக்கும் பணி முடிந்து விட்டது. எனினும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சமுதாய நலக்கூடம் தரப்படுவதில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'காதுகுத்து, சீர், வளைகாப்பு மற்றும் திருமண வரவேற்பு உள்ளிட்ட விசேஷங்களை குறைந்த வாடகையில் இந்த சமுதாய நலக்கூடத்தில் நடத்திக் கொள்ள முடியும். ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும். எனவே, அதிகாரிகள், மூடியே கிடக்கும் சமுதாய நலக்கூடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என்றனர்.