சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு நிதி கோவை வரும் துணை முதல்வர் ஒதுக்குவாரா?
கோவை, : சர்வதேச ஹாக்கி மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கு, 23ல் கோவை வரும் தமிழக துணை முதல்வர் உதயநிதி, லோக்சபா தேர்தலுக்கு அளித்த வாக்குறுதியான சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு நிதி ஒதுக்கி, அறிவிப்பு வெளியிடுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில் கோவை ஆர்.எஸ்.புரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சர்வதேச ஹாக்கி மைதானம் கட்ட ரூ.1.5 கோடி செலவழித்து பணிகள் நடந்தன. மேலும் ரூ.19.5 கோடி ஒதுக்க, திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 'டுபிட்கோ', பல்வேறு கேள்விகள் எழுப்பியதால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக இத்திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது. இத்துறை சார்பில் ஒண்டிப்புதுாரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கான பணிகள் துவக்கியிருப்பதால், ஹாக்கி மைதானம் அமைக்கும் பணியை மாநகராட்சியே மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.இப்பணிக்கு, 10 கோடி ரூபாய் கேட்டு, மாநகராட்சி கருத்துரு அனுப்பியது. நிர்வாக அனுமதி வழங்கிய தமிழக அரசு, மாநகராட்சி நிதியில் செலவழித்துக் கொள்ள அறிவுறுத்தியது.வரும், 23ல் கோவையில் நடைபெறும் விழாவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி, ஹாக்கி மைதானம் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.கடந்த லோக்சபா தேர்தலின்போது, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. வெற்றி பெற்றதும், ஒண்டிப்புதுாரில் உள்ள சிறைத்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு, வகை மாற்றம் செய்யப்பட்டது.மாதிரி வரைபடம் தயாரிக்க 'டெண்டர்' கோரப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடவில்லை. 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கவில்லை.அதனால், கோவை வரும் துணை முதல்வர் உதயநிதி, கிரிக்கெட் மைதானத்துக்கான நிதியை ஒதுக்கி, அறிவிப்பு வெளியிடுவாரா என்கிற எதிர்பார்ப்பு, விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.