தார் ரோடுகளின் தரம் மறுபரிசோதனை செய்யப்படுமா? மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்பார்ப்பு
கோவை; கோவை மாநகராட்சி பகுதியில் போடப்பட்ட தார் ரோடுகளின் தரத்தை, மறுபரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய், காஸ் குழாய் பதிக்கவும், தொலைத்தொடர்பு மற்றும் மின் புதை வடம் பதிக்கவும் ரோடுகள் தோண்டப்பட்டு வருகின்றன. அவ்வாறு தோண்டப்படும் ரோடுகளை சரிவர மூடுவதில்லை. தாங்காத 'வெட் மிக்ஸ்'
ரோட்டுக்கு சரி சமமாக, தேவையான அளவு மண்ணை கொட்டி, இறுகிய பின், சமதளமாக்கியதும் தார் ரோடு போட வேண்டும். அவ்வாறு செய்யாமல், குழியில் மண்ணை கொட்டி மூடியதும், அதன் மீது, 'வெட் மிக்ஸ்' பரப்பி, தார் ரோடு போடும் பழக்கத்தை வைத்திருக்கின்றனர். இவ்வாறு போடப்படும் ரோட்டில், சில நாட்களிலேயே விரிசல் ஏற்படுகிறது; பள்ளம் உருவாகிறது. அவ்வழித்தடங்களில் வாகனங்கள் செல்லும்போது, ரோடு கீழிறங்கி விடுகிறது. மாநகராட்சி பகுதியில் போடப்படும் பெரும்பாலான ரோடுகள் தரமின்றியே காணப்படுகின்றன.கோவைக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது தமிழக அரசு. சமீபத்தில் கோவை வந்த முதல்வர் ஸ்டாலின், தார் ரோடு போடுவதற்காக மேலும், 200 கோடி ரூபாய் ஒதுக்கினார். அதில், 100 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது. 'மெமோ' கொடுக்கணும்
இதற்கு முன் ஒதுக்கிய நிதியில், இன்னும், 17 கி.மீ.,க்கு மட்டுமே தார் ரோடு போட வேண்டியிருக்கிறது என மாநகராட்சி அதிகாரிகள் கணக்குச் சொல்கிறார்கள். பெரும்பாலான ரோடுகள் தரமில்லாமல் இருக்கின்றன. முதல்வரோ, துணை முதல்வரோ வரும் சமயங்களில், அவர்கள் செல்லும் வழித்தடங்களில் மட்டும், அவசர அவசரமாக ரோடு போடப்படுகின்றன. தரமின்றி ரோடு போடப்பட்டு இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டு பொறியாளர், உதவி நிர்வாக பொறியாளர், நிர்வாக பொறியாளர்களுக்கு 'மெமோ' கொடுக்க வேண்டும். அதனால் ஏற்படும் நிதி இழப்புக்கான தொகையை, தொடர்புடைய அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். இதுபோன்ற கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே புதிதாக போடப்படும் ரோடுகள் தரமானதாக இருக்கும்.
தரப்பரிசோதனை தேவை
இதுவரை எத்தனை கி.மீ., துாரத்துக்கு ரோடு போடப்பட்டு இருக்கிறது என்பதை, தமிழக அரசின் உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் தரப்பரிசோதனை செய்ய வேண்டும். கோவையை சேர்ந்த மூன்றாவது ஏஜன்சியினர் மூலம் தரம் பரிசோதனை செய்வது என்பதெல்லாம் ஏமாற்று வேலை என்பதை, உயரதிகாரிகள் உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.