உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆகஸ்டுக்குள் மேற்குப்புற வழிச்சாலை முடியுமா? மாநில நெடுஞ்சாலைத்துறை செயலர் நேரில் ஆய்வு

ஆகஸ்டுக்குள் மேற்குப்புற வழிச்சாலை முடியுமா? மாநில நெடுஞ்சாலைத்துறை செயலர் நேரில் ஆய்வு

கோவை: கோவையில் நடந்து வரும் மேற்குப்புறவழிச்சாலை பணிகளை, மாநில நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ் நேரில் ஆய்வு செய்து, ஆக., மாதத்துக்குள் முடிக்க அறிவுறுத்தினார்.கோவை - பாலக்காடு ரோட்டில், மதுக்கரை அருகே மைல்கல் பகுதியில் துவங்கி, நரசிம்மநாயக்கன் பாளையம் வரை, 32.43 கி.மீ., துாரத்துக்கு, 15 வருவாய் கிராமங்கள் வழியாக, மேற்குப்புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இப்பணி, மூன்று 'பேக்கேஜ்'களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதில், மைல்கல் முதல் மாதம்பட்டி வரை, 11.80 கி.மீ., வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.முதல் பேக்கேஜில், இருபுறமும் 7 மீட்டர் அகலத்துக்கு ஓடுதளம் அமைக்கப்பட்டு உள்ளது; 5 மீட்டர் அகலத்துக்கு மையத்தடுப்பு விடப்பட்டுள்ளது. 17 பெட்டி சிறு பாலங்கள், 13 சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாதம்பட்டி, மைல்கல் ஆகிய இரு இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. நான்கு இடங்களில் பஸ் ஸ்டாப் உருவாக்கப்படுகிறது. இப்பணியை ஆக., மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன், கோவையில் பிரமாண்டமாக விழா நடத்தி, முக்கியமான திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது. அவிநாசி ரோடு மேம்பாலம், செம்மொழி பூங்கா, சர்வதேச ஹாக்கி மைதானம் மற்றும் மேற்குப்புறவழிச்சாலை, பழமையான குதிரை வண்டி கோர்ட் மற்றும் கவர்னர் மாளிகை பணியை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனால், மாநில நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ், கோவை வந்து அவிநாசி ரோடு கட்டுமான பணி மற்றும் மேற்குப்புறவழிச்சாலை பணிகளை நேரில் பார்வையிட்டார்.மேம்பாலங்கள் கட்டும் பணியை அக்., மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை ஆக., மாதத்துக்குள் முடிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.அவிநாசி ரோடு மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த அவர், இரும்பு கர்டர் துாக்கி வைக்கும் பணியை, விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை