வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரவுண்டானா அமைப்பது கஷ்டம். வேண்டுமானால் ரவுண்டு போக சோமபானக் கடை அமைத்துத் தருகிறோம்.
கோவை;கோவை - பொள்ளாச்சி ரோட்டில், சுந்தராபுரம் சந்திப்பு மிக முக்கியமானது. பொள்ளாச்சி நோக்கிச் செல்பவர்கள்/ கோவை நோக்கி வருபவர்கள், மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் வருபவர்கள்/ செல்பவர்கள், போத்தனுார் சாரதா மில் ரோட்டில் வரும் வாகன ஓட்டிகள் சந்திக்கும் இடமாக இருக்கிறது.எந்நேரமும் வாகன போக்குவரத்து காணப்படும். தற்போது தானியங்கி சிக்னல் முறை அமலில் இருக்கிறது. 'பீக் ஹவர்ஸில்' வாகனங்கள் தேங்குவது வாடிக்கையாக இருந்தது. இதற்கு தீர்வு காண, சுந்தராபுரம் சந்திப்பில் டிவைடர்கள் வைத்து தடுக்கப்பட்டு, காந்தி நகர் பகுதியிலும், தனியார் மருத்துவமனை பகுதியிலும், 'யூ டேர்ன்' வசதி ஏற்படுத்தப்பட்டது. இது தற்போது, போக்குவரத்து நெருக்கடியை மேலும் அதிகரித்திருப்பதோடு, வாகன ஓட்டிகளுக்கு தேவையற்ற அவஸ்தையை உருவாக்கியுள்ளது. பிரச்னை 1 கோவை நகரில் இருந்து பொள்ளாச்சி ரோட்டில் வரும் வாகன ஓட்டிகள், மதுக்கரை மார்க்கெட் ரோடு செல்ல வேண்டுமெனில், காந்தி நகர் சென்று திரும்ப வேண்டும். அப்போ து, எதிர் திசையில் கோவை நோக்கி வரும் வாகனங்கள் மீது மோதாமல் கவனமாக திரும்ப வேண்டும். கொஞ்சம் கவனம் சிதறினாலும் விபத்தை சந்திக்க நேரிடும். வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் திரும்பும்போது, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சிறிய வாகனங்கள் திரும்பியதும் அபிராமி மருத்துவமனை செல்லும் குறுகலான வழித்தடம் வழியாக, மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் இணைய வேண்டியிருக்கிறது. பெரிய வாகனங்கள் மீண்டும் சுந்தராபுரம் சந்திப்புக்குச் சென்று திரும்பி வர வேண்டியுள்ளது. பிரச்னை 2 மதுக்கரை மார்க்கெட் ரோட்டுக்குச் செல்ல வேண்டிய பஸ்கள், எல்.ஐ.சி., சந்திப்பில் திரும்பி, ஹவுசிங் யூனிட் பேஸ்-1 பிரதான சாலை வழியாக, காமராஜ் நகர் சந்திப்புக்கு வருகின்றன. இதன் காரணமாக, சுந்தராபுரம் அரவான் பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டிய பயணிகளை, மலபார் பேக்கரி முன்பும், அபிராமி மருத்துவமனை முன் இறங்க வேண்டியவர்களை காந்தி நகர் முன்புறமும் இறக்கி விடுகின்றனர். சாலையை உயிர் பயத்துடன் கடந்து, மதுக்கரை மார்க்கெட் ரோட்டுக்கு பயணிகள் நடந்து வருகின்றனர். எவ்வித அறிவிப்பும் இன்றி, மக்களிடம் கருத்து கேட்காமல், சுந்தராபுரம் அரவான் மேடை பஸ் ஸ்டாப், அபிராமி மருத்துவமனை பஸ் ஸ்டாப் பகுதிகளுக்கு, பஸ் வருவது நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்கிற கேள்வி எழுகிறது. 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களை வார்டு வார்டாக நடத்தி, மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க, தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், பொதுமக்களிடம் அரசு மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருவது, அதிருப்தியை உருவாக்கியுள்ளது. பிரச்னை 3 ஈச்சனாரி பகுதியில் இருந்து, பொள்ளாச்சி ரோட்டில் வருவோரும், மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் வருவோரும், போத்தனுார் சாரதா மில் ரோடு செல்ல வேண்டுமெனில், தனியார் மருத்துவமனை முன் அமைத்துள்ள, 'யூ டேர்ன்' பகுதியில் திரும்ப வேண்டியுள்ளது. அவ்விடத்தில் வாகனங்கள் திரும்பும்போது, பொள்ளாச்சி நோக்கிச் செல்லும் வாகனங்களும் மோதி, விபத்தைச் சந்திக்கின்றன. இதை தவிர்க்க, அபிராமி மருத்துவமனை அருகே உள்ள குறுக்கு வீதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், காந்தி நகர் சென்று, சின்ன சின்ன தெருக்கள் வழியாக சாரதா மில் ரோட்டை சென்றடைகின்றனர். இதன் காரணமாக, காந்தி நகர் 'யூ டேர்ன்' பகுதி மற்றும் அபிராமி மருத்துவமனை குறுக்கு வீதிகளில் செல்லும் வாகனங்களால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு என்ன? சுந்தராபுரம் சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பரீட்சார்த்த முறையில் 'ரவுண்டானா' அமைத்து, தானியங்கி சிக்னல் முறையை அமல்படுத்த வேண்டும். ஒவ்வொரு வழித்தடத்திலும் செல்லும் வாகனங்களை கணக்கிட்டு, சந்திப்பில் தேக்கம் ஏற்படாத வகையில், சிக்னல்களில் காத்திருக்கும் நேரத்தை வினாடிகளில் நிர்ணயிக்க வேண்டும். சில வினாடிகளில் வாகனங்கள் கடந்து செல்ல வேண்டும். தேவையற்ற போக்குவரத்து குழப்பத்தை ஏற்படுத்தி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை இம்சைப்படுத்தக் கூடாது. இவ்விஷயத்தில் போக்குவரத்து போலீசாரும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் மீண்டும் கள ஆய்வு செய்து, உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமாரிடம் கேட்ட போது, ''சுந்தராபுரம் சந்திப்பில் தற்போது வாகனங்கள் நிற்காமல் செல்கின்றன. வாகனங்கள் திரும்பும் இடத்தில் சிரமம் ஏற்படுகிறது என்பது மறுப்பதற்கு இல்லை. சந்திப்பில் பிரச்னை இல்லை; அங்குள்ள போக்குவரத்தை ஆய்வு செய்கிறோம். ஒரு தரப்பினர் மீண்டும் சிக்னல் அமைக்க கோருகின்றனர். இன்னொரு தரப்பினர் வேண்டாம் என்கின்றனர். மீண்டும் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
சுந்தராபுரம் சந்திப்பை கடக்கும் பகுதியில், ஒரு கி.மீ., துாரத்துக்கு ரூ.60 கோடியில் மேம்பாலம் கட்ட 2018ல் அப்போதைய பொள்ளாச்சி எம் .பி., மகேந்திரன் வலியுறுத்தினார். உத்தேச வரைபடம் தயாரித்து, தரை வழி போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார். ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், இத்திட்டத்தை வலியுறுத்த யாரும் முன்வரவில்லை. சுந்தராபுரம் சந்திப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, தீர்வு காண வேண்டும் என்பது, இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ரவுண்டானா அமைப்பது கஷ்டம். வேண்டுமானால் ரவுண்டு போக சோமபானக் கடை அமைத்துத் தருகிறோம்.