மரங்கள் இல்லையெனில் எதிர்காலமில்லை! இயற்கையை பேண விழிப்புணர்வு
பொள்ளாச்சி : 'மரங்கள் இல்லையெனில் எதிர்காலத்தில் வாழ்க்கை இருக்காது; மரம் இருந்தால் மட்டுமே மரணம் இல்லா வாழ்வு அமையும்,' என, மாணவர்களிடம் விளக்கப்பட்டது.பொள்ளாச்சி லயன்ஸ் கிளப் கட்டடத்தில், கம்பன் கலை மன்ற நிகழ்ச்சியில், 'இயற்கையைப் பேணும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு' என்ற தலைப்பில் நடந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர் சாந்தலட்சுமி வரவேற்றார்.உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி தலைமை வகித்தார். தொடர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலையின் வளங்கள், யானைகள் மற்றும் இருவாச்சி பறவையின் வாழ்க்கை முறைகள், சோலைக்காடுகளாக உள்ள புல்வெளிகளின் நீர்ப்பிடிப்பு ஆற்றல்கள் குறித்து விளக்கிப் பேசினார்.இயற்கை ஆர்வலர் கோவை யோகநாதன், காடுகளின் உருவாக்கம் மற்றும் அவசியம் குறித்து பேசுகையில், ''மரங்கள் இல்லையெனில் எதிர்காலத்தில் வாழ்க்கை இருக்காது; மரம் இருந்தால் மட்டுமே மரணம் இல்லா வாழ்வு அமையும்,' என்றார்.தமிழாசிரியர் இளவரசு, நீலகிரி மலையின் சிறப்பு, அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை குறித்து பேசினார்.தொடர்ந்து, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியத்துக்கு, பசுமைக் காவலர் விருது வழங்கப்பட்டது.மேலும், பள்ளிகளில் மரம் வளர்ப்பு பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளி, பெத்தநாயக்கனுார், காளியண்ணன்புதுார், மண்ணுார், ராமநாதபுரம் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நம்பிக்கை விருதுகள் வழங்கப்பட்டன. முடிவில், தமிழாசிரியர் லட்சுமி நன்றி கூறினார்.வட்டார கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி, கவிஞர் தன்சியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கம்பன் கலை மன்ற தலைவர் சண்முகம், செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் செய்திருந்தனர்.