பெண்ணின் மார்பக கட்டி அகற்றம்; அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், பெண்ணுக்கு மார்பக கட்டி அகற்றம் செய்யப்பட்டது. ஆனைமலை அருகே சேத்துமடை அண்ணா நகரை சேர்ந்த, 30 வயது பெண்ணின் மார்பகத்தில் இருந்த கட்டிக்காக, பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். டாக்டர்கள், அவரை பரிசோதித்த போது அவருக்கு இடது பக்க மார்பகத்தில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அவருக்கு தேவையான, சி.டி., ஸ்கேன், ஊசி பரிசோதனை, சதை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அறுவை சிகிச்சை நிபுணர் முருகேசன் தலைமையில், புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மதுமிதா, செவிலியர்கள், மயக்க மருத்துவர் அருள்மணி ஆகியோர் கொண்ட மருத்துவக்குழு, மூன்று மணி நேர அறுவை சிகிச்சையில், கட்டியை அகற்றினர். இக்கட்டியின் எடை, 3.5 கிலோ இருந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் அவர் நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கட்டி திசு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவர் குழுவை, உறவினர்களும், பொதுமக்களும் பாராட்டினர். மருத்துவமனை கண்காளிப்பாளர் ராஜா கூறியதாவது: அனைத்து மகளிரும், 40 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறை மெமோகிராம் மற்றும் மார்பக சுய பரிசோதனை செய்வதன் வாயிலாக மார்பக புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். அறுவை சிகிச்சைக்கு பின் புற்று நோய் மருத்துவரின் ஆலோசனைபடி கீமோ தெரபி, கதிர் வீச்சு சிகிச்சைகள் தேவைப்படும். மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும், கோவை கங்கா மருத்துவமனையும் இணைந்து மாதம் ஒருமுறை நடத்தும் இலவச மார்பக மெமோகிராம் ஸ்கேன் பரிசோதனையை மக்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு, கூறினார்.