அவிநாசி சாலையில் புளிய மரங்கள் வெட்டும் பணி துவக்கம்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம்-அவிநாசி வரை, சாலையின் ஓரங்களில் உள்ள புளிய மரங்கள் வெட்டும் பணிகள் துவங்கியுள்ளன. மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி வரை, 38 கிலோமீட்டருக்கு இருவழி சாலையாக உள்ளது. நாளுக்கு நாள் இச்சாலையில், வாகனங்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. இதனால் இச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த வாகன நெரிசலை போக்குவதற்காக, தமிழக அரசு அவிநாசி சாலையை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய அறிவித்தது. இதற்காக, 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கியதை அடுத்து, அவிநாசியில் இருந்து, கோவை மாவட்ட எல்லை வரை, சாலையின் இரு பக்கம் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட எல்லையில், சாலையின் இரு பக்கம் உள்ள மரங்களை வெட்டுவதற்கு, நெடுஞ்சாலை துறை நிர்வாகம் ஏலம் விட்டது. ஏலம் எடுத்தவர்கள் மரங்களை வெட்டும் பணிகளை துவக்கியுள்ளனர். சாலையில் உள்ள ஒவ்வொரு மரமும், 50 ஆண்டுகளுக்கு மேலான மிகவும் பழமையான புளிய மரங்களாகும். இந்த மரங்களை வெட்டுவதால் சாலையில் நிழல் இல்லாமல் போகும். எனவே நான்கு வழி சாலையாக மாற்றி விரிவாக்கம் செய்த பின்பு, சாலையின் இருபக்கம் நெடுஞ்சாலை துறை நிர்வாகம், மீண்டும் புளிய மரங்களை நடுவதற்கான, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.