வால்பாறை: எஸ்டேட் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி வரும், 27ல் சம்பளம் வழங்க முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. வால்பாறையில் தனியார் தேயிலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு, இருதரப்பு பேச்சு வார்த்தை படி, கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தினக்கூலியாக, 475 ரூபாய் வழங்கப்படுகிறது. ஏ.பி.ஏ., உறுப்பினர் தோட்டங்களில் மட்டுமே இந்த சம்பளம் வழங்கப்படுகிறது. மற்ற, 10 எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இன்று வரை ஒப்பந்தப்படி சம்பளம் வழங்கவில்லை. நிலுவைத்தொகையுடன் சம்பளம் வழங்க கோரி, வால்பாறை மற்றும் நீலகிரியில் இரண்டு கட்டமாக போராட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன. இந்நிலையில் இது தொடர்பான பேச்சு வார்த்தை கோவையில் நேற்று முன்தினம் நடந்தது. கோவை தொழிலாளர் துறை துணை ஆணையாளர் ராஜ்குமார் முன்னிலையில் தொழிற்சங்கத்தினர், தோட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். அதில், தொழிற்சங்கங்களின் சார்பில் அமீது (ஏ.டி.பி.,) சவுந்திரபாண்டியன், வினோத் (எல்.பி.எப்.,), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,), கேசவமருகன் (வி.சி.,), கல்யாணி(எம்.எல்.எப்.,) உள்ளிட்ட 11 தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில் 5 நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொழிற்சங்க தலைவர் அமீது கூறியதாவது: ஒப்பந்தப்படி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க சில நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. மீதமுள்ள நிறுவனங்கள், வரும், 27ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என தொழிலாளர் துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார். அறிவித்தபடி சம்பளம் வழங்காவிட்டால் தொழிலாளர் துறை துணை ஆணையாளர் சாந்தி முன்னிலையில், வரும், 27ல் மீண்டும் பேச்சு நடத்தப்படும். ஒப்பந்தபடி, ஆண், பெண் தொழிலாளர்களுக்கு, 16,440 ரூபாய் நிலுவைத்தொகை வழங்க வேண்டும். பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படுத்தாவிட்டால், கோவை மாவட்டம் வால்பாறை, நிலகிரி மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, கூறினார்.