தென்னையில் இயற்கை வேளாண்மை விவசாயிகளுக்கு பயிலரங்கு
பொள்ளாச்சி ; மண்ணில் பவுதீக, வேதியியல் மற்றும் உயிர் வேதியியல் பண்புகளை மேம்படுத்தி, விளை திறனை பெருக்க விவசாயிகள் முயற்சிக்க வேண்டும், என, பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது.பொள்ளாச்சி அடுத்த, ஆழியாறு நகர், தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், விவசாயிகளுக்கான 'தென்னையில் இயற்கை வேளாண்மை' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. ஆராய்ச்சி நிலைய தலைவர் சுதாலட்சுமி வரவேற்றார்.மத்திய பனைப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவன பயிர் மேலாண்மைப் பிரிவு தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்து பேசுகையில், ''இயற்கை இடுபொருட்கள் வாயிலாக மண்ணின் பவுதீக, வேதியியல் மற்றும் உயிர் வேதியியல் பண்புகளை மேம்படுத்தி, விளை திறனை பெருக்க விவசாயிகள் முயற்சிக்க வேண்டும். ''மண்ணின் பண்புகள் பெருவாரியாக வேறுபடுவதால் தகுந்த ஊடுபயிர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.இதேபோல, உலக வேளாண் காடுகள் மைய மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துபெருமாள் பேசுகையில், ''மகாகனி, மலைவேம்பு, தேக்கு, சவுக்கு. தீக்குச்சி மரம், கிளைரிசிடியா போன்ற மரப்பயிர்களை வளர்த்து தென்னை விவசாயிகள் பயன் பெற முடியும்,'' என்றார்.தொடர்ந்து, கோட்டூர் மலையாண்டிப்பட்டணத்தைச் சேர்ந்த விவசாயி மதுராமகிருஷ்ணன், இயற்கை வேளாண்மையில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.மண்ணின் அங்கக கரிமத்தை மேம்படுத்துவது, வேளாண்மையில் கொடிய பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. முடிவில், தோட்டக்கலை பேராசிரியர் ராஜலிங்கம் நன்றி கூறினார்.பயிலரங்கு ஏற்பாட்டினை பேராசிரியர்கள் மீனா, தவபிரகாஷ், அருள்பிரகாஷ் மற்றும் வேளாண் மேற்பார்வையாளர் சரவணக்குமார், தொழில்நுட்ப உதவியாளர் நாகேஸ்வரி உட்பட பலர் செய்திருந்தனர்.