உலக சுற்றுலா தினம் கொண்டாட்டம்
- நிருபர் குழு -உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தில், சுற்றுலா பயணியருக்கு பரிசு வழங்கப்பட்டது. வால்பாறை தங்கும்விடுதி உரிமையாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், டூரீஸ்ட் கார், வேன் ஓட்டுநர் உரிமையாளர்கள் சங்கம், உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. வால்பாறை நகரின் நுழைவுவாயிலில், சுற்றுலா பயணியரை வரவேற்று சால்வை அணிவித்தும், பரிசுகளும் வழங்கப்பட்டன. வால்பாறை சுற்றுலா மேம்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் அலி, சட்ட ஆலோசகர் உத்தமராஜ், தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஷாஜூ, சவுந்திரபாண்டியன், பாபுஜி, பிரதீப்குமார் பங்கேற்றனர். * உடுமலை திருமூர்த்திமலையில், திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை, உடுமலை, மடத்துக்குளம் வட்ட நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், உலக சுற்றுலா தினம் மற்றும் தூய்மை இந்தியா திட்ட முகாம் நடந்தது. உலக சமாதான ஆலய அறக்கட்டளை செயலர் சுந்தரராமன் தலைமை வகித்தார். உடுமலை எஸ்.கே.பி. பள்ளி என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சேஷநாராயணன் வரவேற்றார். மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், என்.என்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் சரவணன், முன்னாள் அலுவலர் கந்தசாமி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி தாளாளர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.கே.பி., பள்ளி, விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். முகாமில், சுற்றுலா முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதோடு, சுற்றுலா மையமாக திருமூர்த்திமலையில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.