கோயில், நிறுவனங்கள், வீடுகளில் வழிபாடு
கோவை; ஆயுத பூஜையை முன்னிட்டு, கோவை சுற்றுப்பகுதியில் உள்ள கோயில்களில் காலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பெரும்பாலான அம்மன் கோயில்களில், மூலவருக்கு சரஸ்வதி மற்றும் துர்க்கை அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. விநாயகர், முருகன் கோயில்களில் எலுமிச்சை அலங்காரம், காய்கனி அலங்காரம் போன்ற சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. தண்டுமாரியம்மன், கோனியம்மன், புலியகுளம் விநாயகர், ஈச்சனாரி விநாயகர், காந்தி பார்க் பாலதண்டாயுதபாணி கோயில்களில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது; வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொழிற்சாலைகள், நிறுவனங்களில் ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இயந்திரங்கள், உபகரணங்கள் என, தத்தமது தொழிற்கருவிகளுக்கு திருநீறு அணிவித்து, பொட்டு வைத்து, மாலை சூட்டி, தீபமேற்றி வணங்கினர். பொரி, கடலை, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் படையில் இட்டு, வணங்கி, பிரசாதமாக வழங்கினர். வீடுகளில், மக்கள், சரஸ்வதி, லட்சுமி, விநாயகர் உள்ளிட்ட கடவுள் உருவப்படங்களை வைத்து, அலங்காரங்கள் செய்து, வணங்கினர். ஆயுதங்கள், குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வைத்து, பொட்டிட்டு, வாழை இலையில் படையலிட்டு வணங்கினர். சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வழிபாடுகளால் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.