ரேஷனில் நவம்பர் மாத அரிசியை இந்த மாதமே வாங்கலாம்
கோவை: வடகிழக்குப் பருவமழை துவங்கி இருப்பதால், ரேஷன் கார்டுதார்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில், நவம்பர் மாதத்துக்கான ரேஷன் அரிசியை இந்த மாதமே வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், 1448 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக, 11.5 லட்சம் ரேஷன் கார்டுதார்கள் அரிசி, கோதுமை, பாமாயில் பருப்பு உள்ளிட்ட பொருட்களை மாதம் தோறும் வாங்கி வருகின்றனர். மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கடைகளிலும், எல்லா பொருட்களும் தட்டுப்பாடு இல்லாமல் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, வடகிழக்குப் பருவமழை காலம் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு நவம்பர் மாதத்துக்குரிய அரிசியை மட்டும் இந்த மாதத்திலேயே வாங்கி கொள்ள, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன்கடைகளிலும் நவம்பர் மாதத்துக்கான அரிசி மட்டும் இந்த மாதம் இறுதிக்குள் கார்டுதார்கள் வாங்கி கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.