அரசு மருத்துவமனையில் யோகா பயிற்சி பெறலாம்
கோவை; கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் யோகா, இயற்கை மருத்துவ மறுவாழ்வு மையம் புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தினந்தோறும் காலையில் நோயாளிகள் மட்டுமின்றி ஆர்வமுள்ள அனைவருக்கும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளாக, 24ஏ அறையில் செயல்பட்டு வந்த வாழ்வியல் மையம் தற்போது சற்று இடவசதியுடன் நவீன சமையலகம் அருகே மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் வாழ்வியல் மைய மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி கூறியதாவது: யோகா மற்றும் இயற்கை மருத்துவம் வாயிலாக வாழ்வியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வாழ்வியல் மாற்றங்களால் மட்டுமே பல்வேறு உடல் ரீதியான பிரச்னைகள், மனஅழுத்தங்கள் ஏற்படுகின்றன. இதனை சரிசெய்தாலே பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். யோகா முதலில் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும், தெளிவான மனநிலையை ஏற்படுத்தும். நல்ல உறக்கம், உணவு, உடற்பயிற்சி, உணர்வு, இந்த நான்கும் இருந்தாலே ஆரோக்கியமாக வாழலாம். இம்மையத்தில், தினமும் காலை, 8:30 முதல் 9:30 மணி வரை யோகா பயிற்சி அளிக்கின்றோம். தவிர, நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலுாட்டும் பெண்கள் அனைவருக்கும் பயிற்சிகள், மனஅழுத்த மேலாண்மை, ஆயில் மசாஜ், உணவு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சி, சிகிச்சைகள் அளிக்கின்றோம்.. டீன் ( பொறுப்பு) சிவக்குமார் ஒத்துழைப்பால் அனைத்து செயல்பாடுகளும் நடைபெறுகின்றன. யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த சந்தேகங்கள், சிகிச்சை தேவையுள்ளவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.