| ADDED : ஜூலை 11, 2024 05:59 AM
கடலுார், : கடலுாரில் நிதி நிறுவனத்தில் ஊழியர்களை உள்ளே வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார், வண்டிப்பாளையத்தை சேர்ந்த வாலிபர், கடலுாரில் உள்ள தனியார் நிதி நிறுவனம் மூலம் 3 மாதத்திற்கு முன் பைக் வாங்கி, மாத தவணை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவர் இதுவரை தவணை செலுத்தவில்லை எனவும், பைக்கை பறிமுதல் செய்ய உள்ளதாகவும் நிதி நிறுவன அதிகாரிகள் நேற்று வாலிபரை தொடர்பு கொண்டு கூறினர்.அதில் ஆத்திரமடைந்த வாலிபர் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று மதியம் நிதி நிறுவனத்திற்கு சென்று, தவணை செலுத்திய ரசீதுகளை காண்பித்தார். ஆனால் ஊழியர்கள் கண்டு கொள்ளவில்லை.ஆத்திரமடைந்த வாலிபர், நிதி நிறுவன ஊழியர்களை அலுவலகத்திற்குள் வைத்து ஷட்டரை இழுத்து மூடினார்.தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து சென்று ஷட்டரை திறந்து இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். பின் இதுகுறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை ஏற்று வாலிபர் மற்றும் அவரது உறவினர்கள் கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.