2,553 டாக்டர் பணியிடம் நிரப்புவதற்கான தேர்வு தேதி; ஒரு வாரத்தில் அறிவிப்பு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
கடலுார்; ''தமிழகத்தில் 2,553 டாக்டர் பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு தேதி, ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்'' என, சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.கடலுார் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்த அவர் கூறியதாவது:பருவழை காலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தவிர்க்க முடியாத ஒன்று. டெங்குவால் 2012ம் ஆண்டு 66 பேர், 2017ம் ஆண்டு 65 பேர் இறந்தனர். இது தான் அதிக உயிரிழப்பு. இந்தாண்டு டெங்கு இறப்பு குறைந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் செய்யூரில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் இறந்துள்ளனர்.நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் தன்னிச்சையாக மருத்துவம் பார்த்ததால் இறந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 4,031 மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்பு தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.டெங்கு இறப்பை தவிர்க்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் டெங்கு இறப்பு ஜீரோ என்ற நிலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.தமிழகத்தில் ஆறு மாதங்களுக்கு முன் 1027 டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட்டது. தற்போது 2,553 டாக்டர் பணியிடம் நிரப்பப்படஉள்ளது. டாக்டர் பணியிடம் நிரப்பும் பணியை எம்.ஆர்.பி., அமைப்பு செய்து வருகிறது. அவர்கள் ஜூலை 15ம் தேதி வரை 23,000 மனுக்கள் பெற்றுள்ளனர். ஒரு வாரத்தில் தேர்வு தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்வு முடிந்தவுடன், மிக விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். 2026ம் ஆண்டு வரை காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது பணி நியமனம் செய்யப்படவுள்ளது.கடந்த 15ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என அறிவித்தோம். ஆனால், நடத்தியது 1240 முகாம்கள். அதில் பயன்பெற்றவர்கள் 65,155 பேர். கடந்த 15ம் தேதியில் இருந்து இன்று வரை 24932 முகாம் நடத்தப்பட்டது. அதில், 13 லட்சத்து 83 ஆயிரத்து 572 பேர் பயன்பெற்றுள்ளனர். 7,564 பேர் காய்ச்சலுக்கும், இருமல் மற்றும் சளிக்கு 55,972 பேரும், வயிற்று போக்கிற்கு 1,187 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.