குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு விருத்தாசலத்தில் பரபரப்பு
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் வராததைக் கண்டித்து, விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமையில் நேற்று காலை 11:00 மணிக்கு துவங்கியது. முன்னோடி விவசாயிகள் சாத்துக்கூடல் சக்திவேல், பாலு, சுரேஷ், ஜெயகுரு, குப்புசாமி, கலியபெருமாள், கோபி உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள், ஓரிரு துறைகளின் அதிகாரிகள் மட்டும் பங்கேற்றனர்.கூட்டம் துவங்கிய நிலையில், ஓரிரு துறை அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றதால் அதிருப்தியடைந்த விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது. அவர்களை சமாதானம் செய்த ஆர்.டி.ஓ., அடுத்த கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்பார்கள் என உறுதியளித்தார்.தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், 'நெல், மக்காச்சோளம், உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை காட்டுப் பன்றிகள் தின்றும், அழித்தும் நாசம் செய்கின்றன. இதைத் தடுக்கும் வகையில் முள் வேலி அமைத்தால் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுப்போம் என, மிரட்டுகின்றனர்.பாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு காரணமாக மழை காலங்களில் கூட கடைமடை விளை நிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பது இல்லை. நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் குவியும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை பாசன வாய்க்கால்களில் கொட்டுவதால் துார்ந்து கிடக்கின்றன.எனவே, பாசன வாய்க்கால்களை சர்வேயர் மற்றும் வி.ஏ.ஓ., மூலம் அளந்து கல் போட வசதியாக வேளாண் துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் நீர் மேலாண்மையை கிராமங்கள் தோறும் நடைமுறைப்படுத்த வேண்டும்.நகராட்சி காய்கறி மார்க்கெட்டில் விவசாயிகளின் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்திட கடைகள் ஒதுக்க வேண்டும். சம்பா பருவத்திற்கு தேவையான விதைநெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு பதிலாக விதை உற்பத்தி இல்லாத விதை நெல்லை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மூலம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளதால், அதிகாரிகள் ஆய்வு செய்து தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் தெரிவித்து சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ., உறுதியளித்தார்.