இரு வாலிபர்களை கொன்று புதைத்த சக நண்பர் சிக்கினார்
மந்தாரக்குப்பம்:கடலுார் அடுத்த டி.புதுாரை சேர்ந்தவர் அப்புராஜ், 22. எம்.புதுாரை சேர்ந்தவர் சரண்ராஜ், 22; கூலி தொழிலாளியான இருவரும் நண்பர்கள். ஜன., 22 முதல் இருவரையும் காணவில்லை. கடந்த 8ம் தேதி திருப்பாதிரிப்புலியூர் போலீசில் இவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து இருவரின் நண்பர்களிடமும் விசாரித்தனர்.அதில், அதே பகுதியை சேர்ந்த, ஊமங்கலம் மணல்மேடு குவாரியில் லாரி டிரைவராக உள்ள பி.எஸ்.சி., பட்டதாரி பால்ராஜ், அப்புராஜ், சரண்ராஜ் ஆகியோரின் நெருங்கிய நண்பர் என்பதும், மூவரும் ஒன்றாக சுற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும், பால்ராஜ் தலைமறைவானதால் போலீசார் அவர் மீது சந்தேகமடைந்தனர்.தலைமறைவாக இருந்த பால்ராஜை தனிப்படை போலீசார் பிடித்தனர். அப்புராஜ், சரண்ராஜ் ஆகியோரை கொலை செய்து, இரண்டாம் சுரங்கம் மணல்மேடு அருகே புதைத்தாக பால்ராஜ் ஒப்புக்கொண்டார். மது அருந்திய போது, பால்ராஜ் தங்கையை பற்றி அப்புராஜ் தவறாக பேசியதாகவும், அதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, அப்புராஜை இரும்பு ராடால் பால்ராஜ் தாக்கியதும், தடுக்க வந்த சரண்ராஜையும் தாக்கியதும் தெரியவந்தது.உயிரிழந்த இருவரின் உடல்களையும் மண் எடுக்கப்பட்ட பள்ளத்தில் தள்ளிவிட்டு, லாரியில் இருந்த ஒரு லோடு மணலை கொட்டி மூடியது தெரியவந்தது. இதையடுத்து, குவாரியில் இரு உடல்களும் மீட்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.