உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உழைப்பு, கற்பனை இருந்தால் இலக்கை அடையலாம்: அண்ணாமலை பல்கலை தொலை துார கல்வி இயக்குனர் அட்வைஸ்

உழைப்பு, கற்பனை இருந்தால் இலக்கை அடையலாம்: அண்ணாமலை பல்கலை தொலை துார கல்வி இயக்குனர் அட்வைஸ்

ஸ்ரீ முஷ்ணம் : 'நாம் எதை நோக்கி பயணிக்க விரும்புகிறோமோ அதற்கான உழைப்பு, கற்பனை இருந்தால்தான் இலக்கை அடைய முடியும்' என அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதுார கல்வி இயக்குனர் ஸ்ரீநிவாசன் பேசினார்.ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்த 'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி - வினா போட்டியில் அவர் பேசியதாவது:மாதா, பிதா, குரு, தெய்வம் இந்த நான்கில் மாதாவால் நாம் முன்னேறினால் கூட, நம்மை பெரிய சான்றோனாக்குவது தந்தையின் பொறுப்பு. அதையும் தான்டி சிறந்த மனிதனாக, குடிமகனாக நம்மை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். நான் கிராமப்புற பள்ளியில் படித்துதான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். நான் படித்த காலங்களில் தற்போது உள்ளதுபோல், சமூக வலைதளங்கள் கிடையாது.வாசிப்பு பழக்கம் என்பது மிக மிக முக்கியம். மிக உயர்ந்த நிலையை அடைய வாசிப்பு பழக்கம் நிறைய இருக்க வேண்டும். சமூக வலைதளங்களினால் தற்போது வாசிப்பு பழக்கம் குறைந்து போனது.தற்போதுள்ள மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். கதை புத்தகங்களை படித்தால், நிறைய இன்ஸ்பிரேஷன் வரும். சமூக அக்கறையுடன் 'தினமலர் - பட்டம்' இதழ் செயல்படுகிறது.இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடி. அதில், 15 வயது முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்கள் 27 சதவீதம் பேர் உள்ளனர். இளைஞர்கள் அதிகமாக இருந்தால்தான் நாடு வல்லரசாகும்.மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கல்வி கட்டமைப்பு அழகாக உள்ளது. வெறும் படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற முடியாது. அதைதாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. 'தினமலர் - பட்டம்' போன்ற இதழ் இதழ்களை படித்தால்தான வெளி உலகம் தெரியும். ஒரு உந்துதல் ஏற்படும். நாம் எதை எதிர் நோக்கி பயணிக்க நினைக்கின்றோமோ அதற்கான உழைப்பு, கற்பனை இருக்க வேண்டும். அப்போதைய 'தினமலர்' நாளிதழில் வெளிவரும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தெர்வு மாதிரி வினாக்களை சேகரித்து வைத்து படிப்போம்.தற்போது மாணவர்களின் எதிர்காலத்திற்காக 'தினமலர் - பட்டம்' இதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே பத்திரிக்கையில் சி.எஸ்.ஆர்., புத்தகத்தை படிப்பேன். அதில், ஐ.ஏ.எஸ்., பற்றிய விபரம், நேர்காணல், உடல் மொழி, உடை அலங்காரம் குறித்து வெளிவரும். அதை படித்தால் நமக்கு உந்துதல் வரும்.மாணவர்கள் எப்போதும், உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். நமக்கு உழைப்பை விட மனோபலம் முக்கியம், மாணவர்கள் சின்ன சின்ன வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால், சிறந்த இந்தியா, சிறந்த தமிழகத்தை உருவாக்க முடியும். மாணவர்கள் தேர்ந்தெடுப்பது அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.இவ்வாறு ஸ்ரீநிவாசன் பேசினா்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !