கடலுார் மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு
கடலுார் : கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக, கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் ஆய்வு செய்தனர்.கோல்கத்தாவில் பயிற்சி டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கடலுார் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்.பி., ராஜாராம் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பணியில் இருந்த டாக்டர்கள், செவிலியர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.டாக்டர்கள் தங்கும் அறை, ஓய்வு அறை, செவிலியர்கள் ஓய்வு அறை, சி.சி.டி.வி., கேமிரா அமைப்பது, போலீசார் இரவு ரோந்து மேற்கொள்வது, மருத்துவமனை செக்யூரிட்டிகளை அதிகரிப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.ஆய்வுக்கு பிறகு கலெக்டர் கூறுகையில், கடலுார் அரசு மருத்துவமனையில் 75 சி.சி.டி.வி., கேமிராக்கள் உள்ளது. கூடுதலாக கேமிராக்கள் அதிகரிக்கப்படும். ஒரே இடத்தில் இருந்து கேமிராவை கண்காணிக்க கண்ட்ரோல் ரூம் அமைக்கப்படும் என்றார்.