| ADDED : ஜூலை 25, 2024 06:00 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லுாரியில் இம்மாத இறுதிக்குள் நேரடியாக வந்து முதலாமாண்டில் சேருமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள செராமிக் தொழிற்பேட்டை வளாகத்தில், 1964ம் ஆண்டில், அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லுாரி துவங்கப்பட்டது. தொழில் வணிகத்துறையின் கீழ் இயங்கும் கல்லுாரியில், 3 ஆண்டுகள் செராமிக் கலைப் பொருட்கள் தயாரிப்பு முடிக்கும் மாணவர்கள் வெளி நாடுகளிலும், உள்ளூரிலும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.கடந்த 2012ம் ஆண்டில் இருந்து மாணவர் சேர்க்கை இருமடங்கான நிலையில், நடப்பாண்டில் குளறுபடி ஏற்பட்டது. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நேரில் விசாரணை நடத்தியதில், 12 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை பெற்றது தெரிந்தது. ஆண்டுதோறும் 50 மாணவர்கள் வரை சேர்க்கை பெற்ற நிலையில், நடப்பாண்டு குளறுபடி குறித்து தொழில் வணிகத்துறை ஆணையரிடம் எம்.எல்.ஏ., புகார் தெரிவித்தார்.அதன்பேரில், பீங்கான் அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நேரடியாக முதலாமாண்டில் சேர இது ஒரு அரிய வாய்ப்பு. எனவே, வரும் 30ம் தேதிக்குள் மாணவர்கள் நேரடியாக வந்து சேரலாம் என, கல்லுாரியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.