கடலுாரில் மாசி மகத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
கடலுார் : மாசி மகத்தையொட்டி, கடலுார், தேவனாம்பட்டினம் கடற்கரையில் நேற்று ஏராளமானோர், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நேற்று மாசி மகத்தையொட்டி, அதிகாலை முதல் ஏராளமானோர் கடலில் நீராடி, தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். மாசி மக உற்சவத்தையொட்டி, தேவனாம்பட்டினம் வராகி அம்மன், விஜயகணபதி, மஞ்சக்குப்பம் வில்வநாதீஸ்வரர், கிழக்கு ராமாபுரம் பொட்லாயி அம்மன், ஆணைக்குப்பம் நாகவல்லி அம்மன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சுவாமிகள் கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆனால் நேற்று பவுர்ணமி திதி இல்லாததால் திருக்கோவிலுார் உலகளந்தப் பெருமாள், திருவந்திபுரம் தேவநாதசுவாமி போன்ற முக்கிய சுவாமிகளின் தீர்த்தவாரியின்றி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். புதுச்சத்திரம் அடுத்த சாமியார் பேட்டை கடற்கரையில், தீர்த்தனகிரி, வேளங்கிப்பட்டு, அலமேல்மங்காபுரம், சின்னாண்டிக்குழி, தச்சம்பாளையம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. பெரியகுப்பம் கடற்கரையில் கம்பளிமேடு, குள்ளஞ்சாவடி, பெரியக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட சுவாமிகள் தீர்த்தவாரி நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த கூடலையாத்துார் பராசக்தி, நர்த்தன வல்லபேஸ்வரர் உற்சவ சுவாமிகளுக்கு வெள்ளாறு, மணிமுக்தாறு சங்கமிக்கும் இடத்தில் தீர்த்தவாரி நடந்தது.சி.புதுப்பேட்டை கடற்கரைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.