பாசன வாய்க்காலில் கோவில் கட்டும் பணி தடுத்து நிறுத்தம்
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு கிளாங்காடு பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கோவில் கட்டும் பணியை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றிலிருந்து பாசனம் பெறும் கிளாங்காடு பாசன வாய்க்கால் எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாய நிலங்கள் மத்தியில் செல்கிறது. இந்த வாய்க்காலை கிளாங்காட்டை சேர்ந்த நபர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தி சமன்செய்தார். அந்த இடத்தில் விநாயகர் கோவில் கட்டுவதற்காக பூஜை போடும் பணி நடந்தது. தகவலறிந்த சேத்தியாத்தோப்பு வெள்ளாறு பாசனப்பிரிவு உதவி பொறியாளர் படைக்காத்தான் மற்றும் லட்சுமணன், எழிலரசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தடுத்து நிறுத்தினர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தனர்.