மணிமுக்தா ஆற்றில் திடீர் நீர்வரத்து: தர்ப்பணம் கொடுத்தவர்கள் ஓட்டம்
வேப்பூர்: வேப்பூர் அருகே மணிமுக்தா ஆற்றில் நேற்று திடீரென நீர்வரத்து அதிகரித்ததால், மாசி மகத்திற்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.கடலுார் மாவட்டம், வேப்பூர் அருகே மணிமுக்தா, கோமுகி, சின்னாறு ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில், நல்லுார் வில்வனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ஆற்றில் ஆண்டுதோறும் மாசி மகத்தின்போது, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி, மாசி மகத்தையொட்டி நேற்று காலை 5:00 மணி முதல் நல்லுார் மணிமுக்தா ஆற்றில் சுற்றுப்புற கிராம மக்கள் முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். வேப்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், வேப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நல்லுார் மணிமுக்தா ஆற்றில் நேற்று காலை 11:30 மணியளவில் நீர்வரத்து அதிகரித்தது. அப்போது, ஆற்றில் தர்ப்பணம் கொடுத்துக்கொண்டிருந்த மக்கள் இதனை சற்றும் எதிர்பார்க்காமல் அலறி அடித்து ஓடினர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஆற்றில் சிக்கிய 300க்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டு, கரையேற்றினர். தொடர்ந்து, நீர் வரத்து அதிகரித்ததால் ஆற்றில் இறங்கி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.