தீயணைப்பு நிலையம் அமைக்க குமராட்சியில் இடம் ஆய்வு
காட்டுமன்னார்கோவில்: குமராட்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்க தானமாக வழங்கப்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றிசுமார் 150 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏற்படும், தீ விபத்துகளை தடுக்கும் வகையில், காட்டுமன்னார்கோவிலில் செயல்பட்ட ஒரே தீயணைப்பு நியைத்தில் இருந்து வர வேண்டிய நிலை இருந்தது. இதனை தவிர்க்கும் வகையில், குமராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது.அங்கு சொந்த கட்டடம் இல்லாமல், மாதம் 15 ஆயிரம் வாடகையில் இயங்கி வருகிறது. இந்நிலையில், குமராட்சி ஊராட்சி தலைவர் தமிழ்வாணன் முயற்சியால், லால்பேட்டையை சேர்ந்த முகிபுலா என்பவர், 20 செண்ட் இடத்தை தீயணைப்பு நிலையம் அமைக்க தானமாக வழங்கினார்.கடந்த மாதம் ஊராட்சிக்கு நிர்வாகத்திற்கு, இடத்தை பத்திர பதிவு செய்து வழங்கினார். அதனை தொடர்ந்து தீயணைப்பு துறை மாவட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று, குமராட்சி பி.டி.ஓ., சரவணன் தீயணைப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்ட இடத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊராட்சி தலைவர் தமிழ்வாணன், குமராட்சி தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி உடனிருந்தனர்.