வி.கே.டி., சாலை பணி தடுத்து நிறுத்தம் சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே, இழப்பீடு தராமல் பணியை தொடரக்கூடாது என, வி.கே.டி., சாலை பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விக்கிரவாண்டி-தஞ்சாவூர் பைபாஸ் சாலை பணிக்கு, சேத்தியாத்தோப்பு அருகே பின்னலுாரில் துவங்கி அறந்தாங்கி, மா.காடுவெட்டி வரையில், சாலையோரங்களில் இருந்த வீட்டுமனைகள், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.கையகப்படுத்திய இடத்திற்கு, குறைவான இழப்பீடு தொகை கொடுத்ததாக நங்குடி, வானமாதேவி, சோழத்தரம் ஆகிய பகுதிகளில் வீடு மனை, குடியிருப்புகளை இழந்தோர் கடந்த 2022 ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நடத்திய கோர்ட், வீடுமனை கொடுத்தோருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், அந்த தொகை வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.இந்நிலையில், நகாய் அதிகாரிகள் தொகை வழங்காமல் காலம்தாழ்த்தி வருவதை கண்டித்து, நங்குடி கிராம மக்கள் நேற்று மாலை 5:30 மணியளவில், அங்கு நடைபெற்று வரும் வி.கே.டி., சாலை பணியை தடுத்து நிறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.சோழத்தரம் போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து 5:45 மணிக்கு கலைந்து சென்றனர்.இதனால் சென்னை-கும்பகோணம் சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.