உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி துவங்கியது: பொதுமக்கள் ஒத்துழைக்க கலெக்டர் அறிவுறுத்தல்

மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி துவங்கியது: பொதுமக்கள் ஒத்துழைக்க கலெக்டர் அறிவுறுத்தல்

கடலுார்: மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணி துவங்கியுள்ள நிலையில், முழுமையான விவரங்களை அளித்து, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 1ம் தேதி, ஏப்ரல்-1, ஜூலை-1, மற்றும் அக்டோபர்-1 என, ஒவ்வொரு காலாண்டிலும் 18 வயது நிறைவடைந்த இளைஞர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், பெயரை சேர்க்க முன்கூட்டியே விண்ணப்பம் வழங்கலாம்.அதே போன்று, ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இரண்டு கட்டமாக இந்த பணிகள் நடத்தப்படுகிறது. அதையொட்டி, கடலுார் மாவட்டத்தில் முதற்கட்டமாக வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்காக, வாக்குசாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணியை துவக்கி உள்ளனர். கடந்த 20ம் தேதி துவங்கிய இப்பணி, அக்., 10ம் தேதி வரை நடக்கிறது.அப்போது இறந்தவர்களின் பெயர், ஒரு வாக்காளர் பெயர் இரண்டு இடங்களில் இருந்தால் நீக்கம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து, அக்., 28 ம் தேதி வரையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அக்., 29ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான அக்., 29ம் தேதி முதல் நவ., 28 வரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இந்நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். முகாமில் பொதுமக்கள் நேரில் வந்து விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான பணிகள் முடிந்ததும், 2025 ஜனவரி 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியான இளைய தலைமுறையினர் முன்கூட்டியே தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். வாக்காளர் பெயர் சேர்க்கைக்கு பிறகு உரியவருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.வாக்காளர் பட்டியலை, htpps://elections.tngov.inஎன்ற வலைதளத்தில் காணலாம். மேலும் தங்கள் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் நகராட்சி, வட்ட வருவாய் கோட்ட அலுவலகங்களில் அணுகி வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்க்கலாம். 01.01.2025 அன்று 18 வயது நிரம்பிய மற்றும் தகுதியுள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.கடந்த லோக்சபா பொதுத்தேர்தலின்போது சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் பெயர் விடுபட்டுள்ளதாக மனுக்கள் வந்துள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் இந்த பணிகளில் முழுமையாக ஒத்துழைப்பு அளித்து பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதிசெய்திட வேண்டும். மேலும், தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை